Home இந்தியா தமிழகத்தின் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் பற்றிய ஓர் பார்வை! 

தமிழகத்தின் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் பற்றிய ஓர் பார்வை! 

by admin
தொகுப்பு: குளோபல் தமிழ் செய்திகளின் விசேட செய்தியாளர்..
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும் நிலங்களை விடுவிக்குமாறும் வருடங்களைக் கடந்தும் ஈழத் தமிழ் மக்கள் போராடி வருகிறார்கள். இதைப்போலவே தமிழகத்திலும் 100 நாட்களை கடந்து  நரைடபெற்ற ஒரு போராட்டம். அது  ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான தமிழகத்தின் தூத்துக்குடி மக்கள் முன்னெடுத்த போராட்டம் பற்றி குளோபல் தமிழ் செய்திகள் வெளியிட்ட சிறப்புப் பதிவின் மறு பதிவு இது.
ஸ்டெர்லைட் போராட்டத்தை விளங்கிக்கொள்ள எளிமையான குறிப்புக்கள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய் பாதித்து அவதிப்படுவதாக கூறி அந்த ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆலையை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ஸ்டெர்லைட் என்றால் என்ன?
ஸ்டெர்லைட் தொழிற்சாலை  தமிழ்நாடு மாநிலம் தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டானில் அமைந்துள்ளது. இது சுரங்கத்தொழில் மற்றும் உலோகங்களில் உலகளவில் ஈடுபடும் வேதாந்தா ஆராய்ச்சி நிறுவனத்தின் அமைப்பாகும். செம்பு உருக்கும் தொழிற்சாலைக்காக 1993ல் அடிக்கல் நாட்டப்பட்டது. இங்கு செம்பு கம்பி மற்றும் கந்தக அமிலம் பொஸ்பரிக் அமிலம் ஆகியன உற்பத்தி செய்யப்பட்டது.
இதனை நடத்துவது உலகின் மிகப்பெரிய நிறுவனம் வேதாந்தா?

`வேதாந்தா` உலகின் மிகப்பெரிய உலோகம் மற்றும் சுரங்கத் தொழில் நிறுவனம். அதன் உரிமையாளர் அனில் அகர்வால். பாட்னாவில் பிறந்த இவர், பாடசாலைப் படிப்பை முடித்ததும், 1972 ஆம் ஆண்டு தந்தையுடன் அலுமினிய தொழிலில் ஈடுப்பட்டார். பின் மும்பைக்கு சென்றவர், வேதாந்தா நிறுவனத்தை தொடங்கினார். லண்டன் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் இந்திய நிறுவனம் இது.

வேதாந்தாவின் துணை நிறுவனம்தான் ஸ்டர்லைட், இது குஜராத்தின் சில்வஸா மற்றும் தமிழ்நாட்டின் தூத்துக்குடி ஆகிய இரு பகுதிகளில் இயங்குகின்றது. தூத்துக்குடியில் உள்ள ஆலை ஓர் ஆண்டுக்கு 4 லட்சம் மெட்ரிக் தொன் தாமிரத்தை உற்பத்தி செய்கிறது. 2017 ஆம் நிதியாண்டில் அதன் வர்த்தகம் 11.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.

 
தூத்துக்குடிக்கு வந்த  ஸ்டர்லைட்

மஹாராஷ்ட்ரா தொழில் வளர்ச்சி நிறுவனம், முதலில் 1992 ஆம் ஆண்டு, ஸ்டர்லைட் நிறுவனத்துக்கு கடலோர பகுதியான ரத்னகிரியில் 500 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது. ஆனால், உள்ளூர் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்ததை அடுத்து, மஹாராஷ்ட்ர ஆரசு இதற்கான ஒரு ஆய்வு குழுவை அமைத்தது. அவர்கள் அளித்த பரிந்துரையின் பிரகாரம், 1993 ஆம் ஆண்டு கட்டுமான பணிகளை நிறுத்தும்படி ஆட்சியர் ஸ்டர்லைட் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பினார். இதற்கு பின்தான், அந்நிறுவனம் தமிழகத்திற்கு வந்தது.

இது குறித்து பேசும் சூழலியலாளர் நித்தியானந்த் ஜெயராமன், “1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசுகட்டுபாடு வாரியம் இந்நிறுவனத்துக்கு தடையில்லா சான்றிதழ் அளித்தது. அந்நிறுவனத்தை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்ய கோரியது. சூழலியல் மாசை கருத்தில் கொண்டு மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கி.மீ தொலைவில்தான் இந்நிறுவனம் அமைக்கப்பட வேண்டும் என்றது. இதற்காக, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அந்நிறுவனம் செய்ய வேண்டும். ஆனால், இந்நிறுவனம் மன்னார் வளைகுடாவிலிருந்து 14 கி.மீ தொலைவிலேயே அமைக்கப்பட்டது.”என்கிறார்.

போராட்டமும் வழக்குகளும்

ஸ்டெர்லைட் தாமிர உருட்டு தொழிற்சாலை நிலத்தடி நீர், காற்று மண்டலம் ஆகியவற்றை மாசுபடுத்தி பெரும் கேடினை ஏற்படுத்தும் என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக்கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராடி வந்தனர்.

ஸ்டர்லைட் நிறுவனம் சூழலியல் மாசை உண்டாக்குவதாக குற்றஞ்சாட்டி, நஷனல் ட்ரஸ்ட் ஒஃப் க்ளீன் இன்விரான்மென்ட், வைகோ, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட தரப்பிலிருந்து வழக்குகள் பதியப்பட்டன.

1997-2012 ஆம் ஆண்டு காலத்தில் சில ஆண்டுகள் முறையான அரசு ஒப்புதல்களை புதுப்பிக்காமலும் ஆலையை நடத்தியதுதான் இந்த நிறுவனத்தின் மீதான பிரதான குற்றச்சாட்டு.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், 2010 ஆம் ஆண்டு நிறுவனத்தை மூடக்கோரியது. உச்சநீதிமன்ற மேல் முறையீட்டில், நூறு கோடி அபராதம் அளித்து நிறுவனம் தொடர்ந்து செயல்பட அனுமதி அளித்தது.

முடங்கியது  ஸ்டெர்லைட் 

ஆலையில் இருந்து விசவாயு கசிவு ஏற்பட்டதால் அதை சுற்றி இருந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி இத் தொழிற்சாலையை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.

இந்த நிறுவனத்திலிருந்து இதுவரை 82 முறை விஷவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு குற்றம் சாட்டியது.

மார்ச் 30, 2013ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் தொழிற்சாலை இயக்கப்படுவது நிறுத்தப்பட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குழுவினர் ஆலைக்கு சென்று சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் மக்கள்!
ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் சார்பில் அதன் தலைவர் தமிழ் மாந்தன் தலைமையில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி வி.வி.டி. சமிக்ஞை நிலையத்தின் அருகே உண்ணாவிரத போராட்டத்தில்  ஈடுபட்டு வந்தனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகாமையில் உள்ள அ.குமரெட்டியாபுரம் கிராமமக்கள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டம் 100நாட்களை கடந்துள்ளது.

எதிர்ப்பு இயக்கமத்தின் ஏழு அம்சக் கோரிக்கைகள் 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும், சுற்றுச்சூழல் பாதிப்புக்கு காரணமாக ஸ்டெர்லைட் நிறுவன தலைவர் மற்றும் உயர் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும், தூத்துக்குடி மக்களின் உடல் நிலையை கண்டறிய சிறப்பு மருத்துவகுழு அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இருந்து வந்த மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

இதில் தூத்துக்குடி நகர்பகுதி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர், பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மேலும் நடிகர் மன்சூர் அலிகானும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்.

13பேரை பலியெடுத்த தமிழக காவல்துறை

அண்மைய நாட்களில் ஆலை எதிர்ப்பு போராட்டங்கள் வலுவடைந்தன. மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டதுடன் சில நூதமான போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த 23ஆம் திகதி போராட்டக்காரர்கள்மீது தமிழக காவல்துறை நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் 12பேர் உயிரிழந்தனர். இதற்கு மறுநாளும் ஒருவர் பலியாகினார்.
தமிழக காவல்துறையினர் நடாத்திய துப்பாக்கிக்சூடுக்கு உலகம் முழுவதிலிருந்தும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் தற்போது ஆலையை மூட தமிழக அரசு தீர்மானித்துள்ளது.
ஈழத் தமிழரின் குரல்

தமிழக மக்கள் ஈழத்தவர்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பவர்கள். முத்துக்குமார் போன்றவர்கள் தம்மை ஆகுதியாக்கி ஈழ விடுதலைக்காக குரல் கொடுத்தவர்கள். இந்த நிலையில் இயற்கை உரிமைக்காக, சுற்றுப் புறச் சூழலுக்காக போராடும் தூக்குக்குடி மக்களுக்கு குரல் கொடுத்து, அவர்களின் பிரச்சினையை உலகறியச் செய்யும் பணிகளில் குளோபல் தமிழ் செய்திகளும் ஓர் ஊடகமாக இணைந்திருந்தது.
இதேவேளை தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் சில நாடுகளின் இப் பிரச்ச்சினைக்காக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு குரல் கொடுத்தனர்.
தமிழகம் எதிர்கொள்ளும் சுற்றுப் புறச் சூழல் மற்றும் இயற்கை சார்ந்த பிரச்சினைகள் ஈழத்தையும் பாதிக்கும். தூத்துக்குடி மக்களின் பிரச்சினை என்பது ஈழத் தமிழர்களின் பிரச்சினையாகும். தூகத்துக் குடி ஆலையை எதிர்த்தும் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி வேண்டியும் ஈழத்திலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: குளோபல் தமிழ் செய்திகளின் விசேட செய்தியாளர்


முன்னைய பதிவு:http://globaltamilnews.net/2018/7781

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More