குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
வடக்கு கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படும் என பிரதமர் றணில் விக்கிரமசிங்க உறுதி அளித்துள்ளார். இவற்றில் 25 ஆயிரம் வீடுகள் தேசிய நல்லிணக்க அமைச்சின் ஊடாகவும், 40 ஆயிரம் வீடுகள் மீள் குடியேற்ற அமைச்சின் ஊடாகவும் அமைக்கப்பட உள்ளதாகவும் பிரதமர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.
யாழ் செயலக கலந்துரையாடலில் இதனைத் தெரிவித்த அவர், வடக்கு கிழக்கில் வீட்டுப் பிரச்சனை என்பது பிரதானமானது எனவும் அதனை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக முதற்கட்டமாக 25 ஆயிரம் வீடுகளை யுஎன்,ஹபிடாட், யுனொப்ஸ், எஸ்.எல்.ஆர்சி ஊடாக அமைப்பதற்கு அந்த நிறுவனங்களுடன் பேச்சு நடத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது எனவும் மிகுதி 25 ஆயிரம் வீடுகள் அடுத்த கட்டத்தில் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மீள் குடியேற்ற அமைச்சு தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் ஊடாக 40 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் நல்லிணக்க அமைச்சின் ஊடாக அமைக்கப்பட இருந்த 25 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படமாட்டாது என கூறப்படுகிறது. இவ்வாறு மீள் குடியேற்ற அமைச்சினால் அமைக்கப்பட உள்ள வீடுகள் கல் மற்றும் கொன்கிறீட்டுகளால் கட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.