குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நானாட்டன் பிரதேச சபையூடாக அமுல் படுத்தப்படவுள்ள நான்கு வேலைத்திட்டங்கள் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவுகள் எனவும், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனுமதி இன்றி சபைக்குள் புகைப்படம் எடுக்க முடியாது எனவும் நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் தெரிவித்துள்ளதாக நானாட்டான் பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட்டாக தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்களை நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி மறுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக நானாட்டான் பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவிக்கையில்,,
நானாட்டான் பிரதேச சபையின் 3 ஆவது அமர்வு கடந்த 25 ஆம் திகதி காலை இடம் பெற்ற போது நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் நான்கு வேலைத்திட்டங்கள் வடமாகாண பிரதம செயலாளரினால் தீர்மானிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் சபை உறுப்பினர்களாகிய தங்களின் முன் மொழிவுகள் குறித்த வேலைத்திட்டங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் சபையில் சில உறுப்பினர்களின் ஆதரவேடும், அரசியல் ஆதரவோடும் குறித்த திட்டம் குறித்து தன்னிச்சையாக முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.
குறித்த வேலைத்திட்டமானது ஒரு சில அரசியல் வாதிகளின் தனிப்பட்ட அரசியல் செல்வாக்கை உயர்த்தவே பயன்படும். எனவே நானாட்டன் பிரதேச சபையின் 16 உறுப்பினர்கள் முன்னிலையில் புதிய தீர்மானத்தை எடுக்குமாறு கோரியிருந்தோம் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்
இதனை மறுத்த நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் அவ்வாறு செய்ய முடியாது என கூறிய நிலையில் சபை இரண்டாக பிரிந்து கருத்து பரிமாற்றம் இடம் பெற்றது.இதன் போது தலைவர் கூட்டத்தை தன்னிச்சையாக ஒத்தி வைத்தார். மீண்டும் நேற்று திங்கட்கிழமை(28) காலை 10 மணியளவில் நானாட்டான் சபா மண்டபத்தில் உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடல் இடம் பெற்றது.
இதன் போது கடந்த 24 ஆம் திகதி இடம் பெற்ற கலந்துரையாடலின் போது தலைவரின் கருத்துக்கள் சில முக நூலில் போடப்பட்டிருந்தது. எனவே எதிர்வரும் காலங்களில் தான் அனுமதி வழங்கினால் மட்டுமே பத்திரிக்கையாளர்கள் அல்லது சபை உறுப்பினர்களோ படம் அல்லது வீடியோ,ஒலிப்பதிவுகளை பதிவு செய்து கொள்ள முடியும் எனவும் தனது அனுமதி இன்றி எந்த ஊடகவியலாளர்களும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தலைவர் கடும் தொனியில் தெரிவித்தார்.
-மேலும் குறித்த 4 வேலைத்திட்டங்களையும் 15 உறுப்பினர்கள் முன்னிலையில் தெரிவு செய்யுமாறு கோரியதற்கு தனத முடிவில் மாற்றம் இல்லை. குறித்த திட்டங்கள் நடை முறைப்படுத்தப்படும் எனவும்,உங்களினால் இயன்றவற்றை செய்யுங்கள் என கூறி கூட்டத்தை முடித்தார்.என நானாட்டான் பிரதேச சபையின் எதிர்கட்சி உறுப்பினர்கள் 6 பேரூம் இணைந்து தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
-குறித்த குற்றச்சட்டுக்கள் தொடர்பாக நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதியை தொடர்பு கொண்டு வினவிய போது,,
-நானாட்டான் பிரதேச சபை அமர்வுகளில் ஊடகவியலாளர்களை அனுமதிப்பதில்லை என்று நான் கூறியதாக எதிர்கட்சி உறுப்பினர்கள் கூறியதை முற்றாக மறுக்கின்றேன்.
-கடந்த 25 ஆம் திகதி நானாட்டான் பிரதேச சபை அமர்வின் போது பிரதேச அபிவிருத்தி பற்றி கலந்துரையாடல்கள் இடம் பெற்ற போது திர்;க்கட்சி உறுப்பினர்களின் தர்க்கங்களினால் சபையினை ஒத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை (28) காலை 9.30 மணியளவில் சபை அமர்வு இடம் பெற்றது.
குறித்த நான்கு வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
குறித்த வேலைத்திட்டங்களை கட்சி வேறு பாடுகள் இன்றி அனைவரும் சென்று பார்வையிட்டு அவசரமாக அனைவரும் இணைந்து செய்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்ததோடு,மிகவும் அவசரமாக அபிவிருத்தி செய்ய வேண்டிய கிராமங்களில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் கண்டிப்பாக இடம்பெறும் என தெரிவித்தேன்.
ஊடகங்களை நாம் எப்போதும் தடை விதித்தது இல்லை.சபை நடவடிக்கைகளை பார்வையிட அவர்களுக்கு அனுமதி உண்டு.
எனினும் சபை நடவடிக்கைகளின் போது மிக பொறுப்பில் உள்ள சபை உறுப்பினர்கள் சிலர் சபை அமர்வை வீடியோ ஒலிப்பதிவை மேற்கொள்ளுகின்றனர்.
இதனால் சபை நடவடிக்கைகளுக்கு பாரிய இடையூரை ஏற்படுத்துகின்றது.எனவே சபையில் உறுப்பினர்கள் விடியோ ஒலிப்பதிவு செய்வதே தடை செய்யப்பட்டுள்ளதோ தவிர ஊடகவியலாளர்களுக்கு தடை விதிக்கப்படவில்லை என நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி மேலும் தெரிவித்தார்.