மறவன் புலவரும் பின்னொளியும் அரசியலும்… S.K விக்னேஸ்வரன் –
சில காலத்துக்கு முன் ரொறொன்ரோவில் நடந்த ஒரு கூட்டத்தில் முள்ளி வாய்க்காலில் இலங்கை இராணுவம் வகைதொகையின்றி மக்களைக் கொன்றொழித்ததைப் பற்றி பேச நேர்ந்த ஒரு சந்தர்ப்பத்தில், பேசிக்கொண்டிருந்தவரை நோக்கி ஒரு கேள்வி எழுந்தது. ஏன் புலிகளால் மனிதர்கள் கொல்லப்பட்டதை சொல்லமாட்டீர்களா என்று. இதேபோல இன்னொரு சந்தர்ப்பத்தில் இந்திய இராணுவம் வடக்குக் கிழக்கில் செய்த படுகொலைகளைப் பற்றிய பேச்சு வந்தபோதும் இப்படியான கேள்வி எழுப்பப் பட்டது. கேள்வி நியாயமானது தான். ஆனால் எந்தச் சந்தர்ப்பம் என்பதும், எந்த அடிப்படையில் இந்தப் படுகொலைகளை ஒப்பிடுவது என்பதும் தான் மாறுபடுகிறது என்பதைப் புரிந்து கொள்ள தயாரற்ற மனம் தான் இத்தகைய கேள்விகளை எழுப்புவதற்குக் காரணம்.
அனுராதபுரப் படுகொலைகள், பள்லிவாசல் படுகொலைகள், மாற்றுக் கருத்தாளர்களையும், மாற்று இயக்கத்தவர்களையும் தேடித் தேடி அழித்தமை என்று புலிகள் மீது கேள்வியெழுப்பவும் கண்டிக்கவும் பல விடயங்கள் உள்ளன. அவை பேசப்பட வேண்டியவதான் என்பதில் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த இரண்டு வகையான கொலைகளையும் கொலை என்ற ஒரே தளத்தில் வைத்துப் பார்ப்பதும் பேசுவதும் இவற்றுக்குப் பின்னாலுள்ள அரசியலின் முக்கியத்துவத்தை நீர்த்துப் போகச் செய்வதன்றி வேறல்ல.
தனிப்பட்ட ரீதியிலும், ஒரு சமூகம் என்ற ரீதியிலும் மக்களுக்கு எதிராக நடாத்தப்படும் ஒடுக்குமுறையாளரின் தாக்குதல்களை அவர்களின் அரசியலின் பின்னாலுள்ள நோக்கங்களை அடிப்படையாக வைத்து நோக்காமல் ஒரே விதமாக அணுகுவது அரசியலை ஒதுக்கிவிட்டு வெறும் சம்பவங்களைப் பட்டியலிடும் விவகாரமாகிவிடும்.
இவ்வாறுதான் மறவன் புலவு சச்சிதானதனின் மதவெறிக் கூச்சலையும் முஸ்லிம்களுக்கு எதிரான அவரது எதிர்ப்பு அரசியலையும் கண்டிக்கும் போது முஸ்லிம்கள் தரப்பில் நடந்த தமிழ் மக்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட தாக்குதல்களையும் எதிர்ப்பு அரசியல் பேச்சுக்களையும் கண்டிக்கவில்லையே என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அதே தவறான அணுகுமுறை. அவற்றின் பின்னால் உள்ள அரசியலை அடையாளம் காண மறுக்கும் அணுகுமுறை.
இது திரும்பவும் அரசியல் முக்கியத்துவத்தை நீர்க்கச் செய்யும் செயலையே செய்கிறது. நாடு இனங்களாகப் பிளவு பட்டிருக்கும் நிலையில், இனங்களிடையே ஐக்கியத்தின் அவசியம் பற்றிப் பேச விரும்புகிறவர்கள், ஒடுக்கப்படும் தமது இனத்தின் வாழ்வு உரிமையும், பண்பாடும் மதிக்கப்பட வேணும் என்று எதிர்பார்ப்பவர்கள், அதே நேரம் மற்ற இனத்தின் உரிமையையும் பண்பாட்டையும் மதிக்க தயாராக இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.அப்போதுதான் உரையாடலுக்கான வாய்ப்பு ஏற்பட முடியும்.
இலங்கை அரசாங்கம் இனங்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்த முடியாமைக்குக் காரணமும் இதுவே. மறவன் புலவை கண்டிக்கும் போது முஸ்லிம் தரப்பில் நடாத்தப்பட்ட தாக்குதல்கள்,மற்றும் அத்தரப்பின் அரசியல் வாதிகளின் இனவெறிக்கூச்சல்களைyஉம் கண்டிக்க வேணுமென்பது மறவன் புலவாரின் அரசியலை நீர்க்கச் செய்யவே உதவும். ஆம். மற்றப் பக்கத்தையும் கண்டிக்கத்தான் வேண்டும். அதன் பின்னாலுள்ள அரசியலையும் சேர்த்து அதை அந்தச் சந்தர்ப்பத்தில் நிச்சியமாகச் செய்ய வேண்டும்.
S.K விக்னேஸ்வரன் தனது முகநூலில் பதிந்ததனை இங்கு தருகிறோம்… ஆரோக்கியமான விவாதம் தொடரட்டும்…