பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் பிணை கோரி தாக்கல் செய்த மீள்பரிசீலனை மனு சம்பந்தமாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் விளக்கமளித்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் நீதிபதி சிரான் குணரத்ன முன்னிலையில் குறித்த வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு வந்த நிலையில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றம் ஆகியன பிணை வழங்க மறுப்புத் தெரிவித்தமை சட்டரீதியானதே என சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையாகியிருந்த மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல் யசந்த கோதாகொட மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.
அதன்படி இந்த மனு மீதான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 11ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரகசிய காவல்துறையினர் நீதிமன்றுக்கு சமர்பித்த அறிக்கையில் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் எந்த தவறும் இனங்காணப்படவில்லை என தெரிவித்திருந்ததாகவும் இதனால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பிணை மறுப்புத் தீர்ப்பு சட்டத்துக்கு முரணானது என தீர்ப்பளித்து தம்மை பிணையில் விடுவிக்க உத்தரவிடுமாறு அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன மேன்முறையீட்டு நீதிமன்றில் கேட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.