பெண்களை கார் ஓட்ட அனுமதித்தல், திரையரங்குகளில் திரைப்படம் பார்க்க அனுமதித்தல் போன்ற பாவமான காரியங்களைச் செய்யாதீர்கள் என சவுதி அரேபிய இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு அல்கொய்தா தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சவூதி அரேபியாவில் பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்து வருகின்ற நிலையில் இளவரசர் முகம்மது பின் சல்மான் ஆட்சிக்குப் பின் பல்வேறு புதிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
அவர் அண்மையில் பெண்கள் கார் ஓட்டுவதற்கும், ஓட்டுநர் உரிமம் பெற்றுக்கொள்ளவும் அனுமதி அளித்தார். அதுமட்டுமல்லாமல், பெண்கள் திரையரங்குகளில் சென்று சினிமா பார்க்கவும் அவர் அனுமதித்தார். இவ்வாறு கட்டுப்பாடுகளைத் தளர்த்திச் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துக்கு ஆத்திரத்தை வரவழைத்துள்ள நிலையில் ஏமனில் உள்ள அல்கொய்தா அமைப்பு சவுதி இளவரசருக்கு எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது .
அதில் மசூதிகள் அனைத்தும் சினிமா தியேட்டர்களாக மாறுகின்றனஎனவும் பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்கப்படுகிறார்கள் எனவும் இமாம்களுக்கு மாற்றுப் புத்தகங்கள் வழங்கப்படுவதாகவும் மேற்கத்திய மற்றும் கிழக்கு நாடுகளில் இருந்து ஆத்திகவாதிகளும், மதச்சார்பின்மையாளர்களும் வந்து கருத்துகளைப் பரப்புகிறார்கள் எனவும் அங்கு ஒழுக்கக் குறைவு ஏற்படவும், ஊழல் நடைபெறவும் கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற மதத்துக்கு விரோதமான பாவமான காரியங்களைச் செய்யாதீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது