இராணுவத்தினர் மக்களின் சிவில் வாழ்க்கையிலும் குறிப்பாக கல்வித்துறைக்குள் தலையிடக்கூடாது என்று வடக்கு மாகாண சபையினர் வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் இராவணும் நடத்தும் முன்பள்ளிகளை இராணுவத்தினரிடமிருந்து மீட்க வேண்டும் என்றும் தமிழ் தலைமைகள் கோரி வருகின்றன. இந்த நிலையில் வடக்கு மாகாண சபை நிர்வாகம் மற்றும் கல்வி நிர்வாகமே இராணுவத்தை கல்விக்குள் இழுகிறதா என்று கேள்வி எழுப்பட்டுள்ளது.
ஆசிரியருக்கு கற்பித்த இராணுவம்!
ஆசிரியருக்கே இராணுவத்தினர் பாடம் எடுத்த நிகழ்வொன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. துணுக்காய் வலயத்துக்குட்பட்ட சுற்றாடல் சார்ந்த ஆசிரியர்களுக்கான செயலமர்வினபோது இரானுவ அதிகாரி ஒருவரே விரிவுரையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் நேற்று ஆரம்பமானது. செயலமர்வின் முதற்கட்டமாக உடற்பயிற்சி சார்ந்த விரிவுரைகள் நடைபெற்றன. உடற்பயிற்சி சார்ந்த பயிற்சிகளை இராணுவ அதிகாரி ஒருவரே வழங்கியுள்ளார்.இந்த நிகழ்வு பல்வேறு தரப்பினரிடையேயும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை இதனை நடத்தும் மத்திய சுற்றாடல் அதிகார சபையே. வளவாளரையும் ஏற்பாடு செய்தாகவும் அதற்கான அனுமதியை மாத்திரமே தான் வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ள துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் பொ.ரவிச்சந்திரன் இராணுவ அதிகாரியை வளவாளராக நியமித்தமை தொடர்பில் அவர்களிடம் கேட்டுத்தான் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு சுடப்பழக்கும் இராணுவம்!
இதேவேளை கல்விக்குள் இராணுவத்தினர் மூக்கை நுழைக்கும் மற்றொரு நிகழ்வும் வடக்கில் இடம்பெற்று வருகிறது. பாடசாலை மாணவர்களுக்கு இராணுவத்தினர் உடற்பயிற்சிகள் மற்றும் தூப்பாக்கியால் சுடும் போட்டி என்பன நிகழ்த்தி வருகின்றனர். இதற்கான அனுமதியையும் வடக்கு மாகாண கல்வி நிர்வாகம் வழங்கியுள்ளது.
இதன்படி வடக்கில் உள்ள பாடசாலைகளுக்கு சீருடைகளுடன் செல்லும் இராணுவத்தினர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இதில் துப்பாக்கியால் சுடுவதற்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அத்துடன் உடற்பயிற்சிக்கான மொழி மற்றும் தேசிய கீதம் என்பன சிங்களத்திலேயே இருக்க வேண்டும் என்றும் பயிற்சி அளிக்கும் இராணுவ சிப்பாய்கள் மாணவர்களை கண்டிப்பாகப் பணித்துள்ளனர்.
இதேபோன்று பாடசாலைகளுக்கு உதவுதல், வறிய மாணவர்களுக்கு உதவுதல் என பல்வேறு திட்டங்களை வைத்து இராணுவத்தினரை அரசாங்கம் தினமும் பாடசாலைகளுக்கு அனுப்பி வருகிறது என்றும் அவ்வாறு வருபவர்கள் உதவுவதுபோல் பாவனை செய்து கொண்டு கல்வி நடவடிக்கையில் தலையிடுவதுடன் பாடசாலைக்குள் நுழையவும் விரும்புகின்றனர் என்று கிளிநொச்சி நகரத்தில் உள்ள பிரபல பாடசாலை அதிபர் ஒருவர் கூறுகிறார்.
இராணுவ வசமுள்ள மத்திய கல்லூரி மைதானம்
கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தை இலங்கை இராணுவத்தினர் தொடர்ந்தும் தம் வசப்படுத்தியுள்ளனர். அண்மையில் வெசாக் நிகழ்வுகளுக்காக மாதக் கணக்கில் பாடசாலை மைதானத்தை ஆக்கிரமித்திருந்த இராணுவத்தினர் தற்போது மீண்டும் இராணுவ விளையாட்டு நிகழ்வு ஒன்றுக்காக கல்லூரி மைதானத்தை தம் வசப்படுத்தியுள்ளனர். இதனால் மாணவர்களின் கற்றல் மற்றும் இணைபாட விதானச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பாடசாலையின் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
வடக்கில் இராணுவத்தினர் கல்வி நடவடிக்கைகளில் தலையீடு செய்வது மாணவர்களையும் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் பெரும் அசௌகரியப்படுத்தியுள்ளது. ஏற்கனவே இலங்கையின் கல்வி நிலவரப்படி ஒன்பதாவது மாகாணமாக வடக்கு இருக்கின்றது. இராணுவத்தினர் பாடசாலை வளங்களை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தலில் இராணுவம் ஈடுபடாது துறைசார் கல்வி வல்லுனர்கள் ஈடுபடவேண்டும் என்றும் வடக்கு மாகாண நிர்வாகத்திடம் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்