Home இந்தியா எனது படங்களில் வரும் மௌனங்களை மதிக்கத் தெரிந்தவர் இளையராஜா – பாலுமகேந்திரா -இன்று இளையராஜாவுக்குப் பிறந்தநாள்

எனது படங்களில் வரும் மௌனங்களை மதிக்கத் தெரிந்தவர் இளையராஜா – பாலுமகேந்திரா -இன்று இளையராஜாவுக்குப் பிறந்தநாள்

by admin

 

இளையராஜா, இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இவர் இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராகத் திகழ்கிறார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது.
தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.

இவருடைய இசைப்பணிகள் எண்ணில் அடங்காதவை. இவருடைய மகன் யுவன் சங்கர் ராஜா சிறந்த இசை அமைப்பாளராக வளர்ந்து உள்ளார். இந்திய திரைப்படங்களில் மேற்கத்திய பாரம்பரிய இசையைப் புகுத்தியவர்களில் இளையராஜாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.

இளையராஜா என்ற மகாவித்வானும் நானும்! – பாலு

எழுபதுகளின் முற்பகுதி. ஒளிப்பதிவாளராக மட்டும் நான் பணியாற்றிக் கொண்டிருந்த காலம். கேரளத்தில் மலையாளப் படங்களில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது ஒரு தெலுங்கு பட வாய்ப்பு வந்தது. அந்தப் படத்தின் இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ். ஜி.கே. வெங்கடேஷ் அந்தப் படத்திற்கு இசை. வெங்கடேஷ் எம்.எஸ்.வி.யுடன் பணியாற்றியவர். நல்ல இசை ஞானம் உள்ளவர். மியூசிக் கம்போசிங் மாம்பலத்திலிருந்த தயாரிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும். வெங்கடேஷுடன், உதவியாளராகத் தேனியைச் சேர்ந்த ஒரு இளைஞன் கூடவே வருவான். கிட்டார் கொண்டுவருவான். அவன் பெயர் இளையராஜா.

அந்தத் தெலுங்குப் படத்தின் மியூசிக் கம்போசிங்கின் போதுதான் இளையராஜாவுக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டது. இளையராஜா சினிமாவைப் பற்றியும், ஒளிப்பதிவின் நுட்பங்கள் பற்றியும் என்னிடம் நிறைய பேசுவார். நேரம் போவது தெரியாமல் பேசுவோம்.

தான் இசையமைக்கப் போகும் முதல் படத்திற்கென்று அவர் போட்டுவைத்திருந்த மெட்டுகளை எனக்குப் பாடிக் காண்பிப்பார். சில வருடங்கள் கழித்து அவர் இசையமைத்த முதல் படமான அன்னக்கிளியின் மெட்டுக்கள் சில அவர் எனக்குப் பாடிக் காண்பித்தவைதான். இளையராஜா என்ற அந்தக் கிராமத்து இளைஞரின் அசாத்தியமான திறன் என்னை அதிர வைத்தது.

வியர்வை வாசனையோடும் கலந்து வந்த இசை

நான் இயக்கும் முதல் படத்திற்கு இளையராஜாவைத்தான் இசையமைப் பாளராக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு பண்ணியிருந்தேன். எனது எண்ணத்தை வெங்கடேஷ் அவர்களிடம் தெரியப்படுத்தவும் செய்தேன். அதைக் கேட்ட அவர் சொன்ன தீர்க்கதரிசன வார்த்தைகள் எனக்கு இன்னும் பசுமையாக ஞாபகம் இருக்கின்றன. “பாலு, இந்தப் பயலுக்கு மட்டும் நீங்க ஒரு சான்ஸ் குடுத்தீங்க, அம்புட்டுத்தான், எல்லாரையும் தூக்கி ஓரங்கட்டிடுவான்.”

அப்படியேதான் நடந்தது. ஆனால் சான்ஸ் கொடுத்தது நானல்ல. பஞ்சு அருணாச்சலம் என்ற தயாரிப்பாளர். அன்னக்கிளி படமும், அதற்கான இளையராஜாவின் இசையும் மிகப் பெரிய வெற்றி ஈட்டின.

தங்களுடைய மண்ணின் இசையைத் தமிழர்கள் இளையராஜா என்ற இந்தக் கிராமத்து இளைஞன் மூலம் தெரிந்துகொண்டார்கள். ராஜாவின் இசை, தமிழர்களின் இசை. தமிழ் மண்ணின் இசை. தமிழ்க் கிராமங்களின் மண்வாசனையோடும், அந்த மக்களின் வியர்வை வாசனையோடும் கலந்து வந்த இசை.

நான் கொடுக்காத வாய்ப்பு

பூனே திரைப்படக் கல்லூரியில் படிப்பை முடித்துத் தங்கப் பதக்கம் வென்று நான் வெளிவந்த வருடம் 1969. ‘செம்மீன்’ புகழ் ராமு கரியாத், செம்மீனை அடுத்து இயக்கிய நெல்லு என்ற மலையாளப் படத்தின் ஒளிப்பதிவாளராக என்னை அறிமுகப்படுத்துகிறார். ‘நெல்லு’ படத்தின் இசையமைப்பாளர் சலீல் சௌத்ரி. செம்மீன் படத்திற்கும் அவர்தான் இசை. ‘நெல்லு’ படத்தின் ஒளிப்பதிவைப் பார்த்துப் பிரமித்துப் போன அவர் என் மீது மிகவும் பிரியமாக இருந்தார். அந்தப் பிரியத்தின் வெளிப்பாடாக அவர் ஒரு நாள் என்னிடம் சொன்னார். “பாலு நீ இயக்கும் முதல் படத்திற்கு நான் தான் இசையமைப்பேன்”. இந்திய இசைவானில் தன்னிகரற்ற நட்சத்திரமாகத் திகழ்ந்த அந்த மகா வித்வானின் அன்புக் கட்டளை அது. எனது முதற் படமான ‘கோகிலா’வுக்கு அவரே இசையமைத்தார். அது நடந்தது 1976-ல்.

முதல் படத்தின் இசையமைப்பாளராக இளையராஜாவைத்தான் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டவன் நான். கன்னடக் கோகிலாவைத் தொடர்ந்து நான் இயக்கிய இரண்டாவது படம் ‘அழியாத கோலங்கள்’. இதற்கும் சலீல் சௌத்ரியே இசையமைத்தார். அவர் வேண்டுகோளை என்னால் தட்ட முடியவில்லை. 78-ல்

நான் இயக்கிய மூன்றாவது படம் ‘மூடுபனி’. இந்தப் படத்திற்குத்தான் நான் இளையராஜாவை வைத்துக்கொள்ள முடிந்தது. மூடுபனி எனக்கு மூன்றாவது படம். இளையராஜாவுக்கு அது நூறாவது படம். இளையராஜா அத்தனை வேகமாகப் போய்க்கொண்டிருந்தார்.

34 இனிய வருடங்கள்

மூடுபனியில் தொடங்கி 2005-ல் வெளிவந்த ‘அது ஒரு கனாக்காலம்’ வரை எனது எல்லாப் படங்களுக்கும் இளையராஜாதான் இசையமைப்பாளர். ‘தலைமுறைகள்’ என்ற எனது 22-வது படத்திற்கும் இளையராஜாதான் இசை. இதை நான் இன்னும் ராஜாவிடம் சொல்லவில்லை. படத்தை முடித்து அவருக்குப் போட்டுக் காண்பித்த பின் சொல்லலாமென்றிருக்கிறேன்.

78-ல் தொடங்கிய எங்கள் உறவு இன்று வரை தொடர்கிறது. 34 இனிய வருடங்கள்! இன்னும் ஐந்தாறு படங்களாவது செய்துவிட்டுப் போக வேண்டும் என்பது என் எண்ணம். கண்டிப்பாகச் செய்வேன். அவை எல்லாவற்றிற்கும் இசை எனது ராஜாதான். அதில் மாற்றம் கிடையாது.

மூடுபனி படத்திற்கு முன்பும் பின்புமாக யேசுதாஸ் பல நூறு பாடல்களைப் பாடியிருக்கிறார். இருப்பினும், தனக்கு மிகவும் பிடித்தப் பாடல் என்று இன்றுவரை அவர் சொல்லிக்கொண்டிருப்பது ‘மூடுபனி’ படத்தில் வந்த ‘என் இனிய பொன் நிலாவே’ பாடல்தான்.

என் படங்களுக்கான இசை, குறிப்பாகப் பின்னணி இசை எங்குத் தொடங்கி எங்கு முடிய வேண்டும், அது எப்படிப்பட்ட இசையாக இருக்க வேண்டும் என்பவற்றில் நான் வெகு உன்னிப்பாக இருப்பேன். இவற்றையெல்லாம் திரைக்கதை எழுதும்போதே தீர்மானித்துக்கொள்வேன். படத் தொகுப்பு முடிந்து, இசைச் சேர்க்கைக்குத் தயாரானதும், அந்தப் படத்திற்கான இசை பற்றிய எனது எண்ணங்களை இசையமைப்பாளருக்குத் தெளிவாகத் தெரியப்படுத்துவேன். பிரக்ஞைபூர்வமாக நான் வைக்கும் மௌனங்களை, உணர்வு பொதிந்த, அர்த்தமுள்ள மௌனங்களை இசை கொண்டு கலைக்க வேண்டாம் என்றும் நான் கேட்டுக்கொள்வேன்.

ஒரு படத்திற்கான இசையை யார் தீர்மானிப்பது?

‘மூடுபனி’ படத்தின் இசைச் சேர்க்கைக்கு முன், அதற்கான இசை எப்படி இருக்க வேண்டும் என்ற எனது எண்ணங்களை இளையராஜாவுக்கு மிக நுணுக்கமாகத் தெரியப்படுத்தியிருந்தேன். இசைஞானியுடன் பணியாற்றத் தொடங்கிய அந்த ஆரம்ப நாட்களில் ஒரு நாள் ராஜா என்னிடம் கேட்டார். “ஒரு படத்திற்கான இசையை யார் தீர்மானிப்பது?”

என்ன மன நிலையில் அந்தக் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது என்பதை உடனடியாக நான் புரிந்துகொண்டேன். இசை அமைப்பதில் அதுவரை அவர் அனுபவித்து வந்த படைப்புச் சுதந்திரத்திற்குள் நான் மூக்கை நுழைக்கிறேனோ என்ற சந்தேகம் எனக்கே தோன்ற ஆரம்பித்திருந்தது. கொஞ்சம் யோசித்துவிட்டு நான் சொன்னேன்:

“ஒரு நதி அது ஆரம்பிக்கும் இடத்திலிருந்து கடலில் சென்று கலக்கும் வரை மாறிக்கொண்டே இருக்கும். ஆரம்பிக்கும் இடத்தில் அது ஒரு சிறிய ஊற்றாக இருக்கலாம். அப்படி ஆரம்பிக்கும் அந்த நதி சற்றுத் தள்ளி ஒரு சிறிய அருவியாக ஓடுகிறது. இன்னும் சற்றுத் தொலைவில் வேறு சிற்றருவிகள் சில அதனுடன் சேர்ந்துகொள்ள, அது ஒரு காட்டருவியாக உருமாறுகிறது. இன்னுமொரு இடத்தில் நெடிதுயர்ந்து நிற்கும் பாறைகளிலிருந்து பேரழகும், பேரிரைச்சலும் கொண்ட நீர்வீழ்ச்சியாகக் கொட்டுகிறது. வேறு ஒரு இடத்தில் அது விரிந்து பரந்த நீர்த்தேக்கமாக ஸ்தம்பித்து நிற்பது போன்ற தோற்றத்துடனும் அதிக ஆழத்துடனும் காட்சியளிக்கிறது. அந்த நீர்த் தேக்கத்திலிருந்து வழிந்து கீழே உள்ளக் கூழாங்கற்களின் மீது ஒரு குட்டிப் பெண்ணின் குதூகலத்துடனும் சிலு சிலு என்ற சத்தத்துடனும் ஸ்படிகம் போன்ற தெளிவுடனும் துள்ளிக் குதித்தபடி தொடர்கிறது. இன்னும் சில இடங்களில் அது நிலத்தடி நீராக மாறிக் காணாமல் போய்விடுகிறது. இப்படியாக ஒரு நதியானது அது ஆரம்பிக்கும் இடத்திலிருந்து இறுதியில் கடலுடன் சென்று கலக்கும் வரை அதன் தோற்றத்திலும் வேகம், ஆழம் ஆகியனவற்றிலும் மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த மாற்றங்களையெல்லாம் நதியா தீர்மானிக்கிறது? அதன் கீழேயுள்ள நிலப்படுகைதானே – நிலத்தின் அமைப்புதானே தீர்மானிக்கிறது!

நான் பேசப் பேச ராஜாவின் அகத்தில் ஏற்பட்ட தெளிவு அவர் முகத்தில் தெரிகிறது.

“இதுபோலத்தான் ஒரு திரைப்படத்தின் இசையும். ஒரு திரைப்படத்திற்கான இசையை, குறிப்பாக அதன் பின்னணி இசையை, அந்தப் படம்தான் – அந்தப் படத்தின் திரைக்கதைதான் தீர்மானிக்கிறது. இசை மட்டுமல்ல, ஒளிப்பதிவையும், ஒலி அமைப்பையும், நடிப்பையும், படத் தொகுப்பையும், உடைகளையும் சகலத்தையும் தீர்மானிப்பது அதன் திரைக்கதைதான்!”

கேட்டுக்கொண்டிருந்த ராஜாவின் முகத்தில் புன்னகை மலர்கிறது. கைதட்டி ஆமோதிக்கிறார். அன்று முதல் இன்று வரை எனது படங்களுக்கான அவரது இசை அந்தந்தத் திரைக்கதைகளின் தேவையை ஒட்டியே இருந்துவந்திருக்கிறது.

எனது படங்களில் வரும் மௌனங்களை மதிக்கத் தெரிந்தவர் அவர். எனது அர்த்தமுள்ள மௌனங்களின் அழுத்தத்தை என்றுமே இசை கொண்டு அவர் கலைத்ததில்லை.

That is my Raja..!

-பாலுமகேந்திரா

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More