ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக நடிகர் சல்மான்கான் சகோதரிடம் மும்பை காவற்துறையினர் இன்று நடத்திய விசாரணையில், அவர் சூதாடியதை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் 7-ந் தேதி முதல் மே 27-ந் திகதி வரை நடைபெற்றது. ஐ.பி.எல். போட்டி தொடர்பாக மும்பையில் மிகப்பெரிய அளவில் சூதாட்டம் (பெற்றிங்) நடந்ததை காவற்துறையினர் கண்டறிந்தனர். இது தொடர்பாக சூதாட்ட தரகர்கள் 3 பேர் கடந்த 16-ந் தேதி டோம்புவிலியில் கைதாகினர். அவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து 18-ந் திகதி மேலும் 2 சூதாட்ட தரகர்களும், 29-ந் திகதி சோனு ஜலான் என்ற சூதாட்ட தரகரும் கைது செய்யப்பட்டனர். சோனு ஜலான் மீது ஏற்கனவே கிரிமினல் வழக்குகள் உள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்தி நடிகரும், பொலிவுட்டின் பிரபல நட்சத்திரம் சல்மான்கானின் இளைய சகோதரருமான அர்பாஸ்கானுக்கு இதில் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து தானே குற்றப்பிரிவு காவற்துறையினர் அவருக்கு இன்று நேரில் ஆஜராகுமாறு நேற்று சம்மன் அனுப்பி இருந்தனர். சம்மனை தொடர்ந்து இந்தி நடிகரும், தயாரிப்பாளருமான அர்பாஸ்கான் இன்று காலை தானே காவற்துறை நிலையத்துக்கு சென்றார். அவரிடம் ஐ.பி.எல். பெட்டிங் குறித்து காவற்துறையினர் விசாரணை நடத்தினர். சிரேஸ்ட்ட காவற்துறை அதிகாரி தலைமையில் 5 பேர், அவரிடம் சூதாட்ட தரகர் சோனுவுடன் உள்ள தொடர்பு குறித்து தீவிரமாக விசாரணை செய்தனர்.
எத்தனை முறை சோனு மூலம் பெற்றிங்கில் ஈடுபட்டீர்கள், இருவருக்கும் உள்ள பண பரிவர்த்தனை என்பது உள்பட பல்வேறு கேள்விகளை காவற்துறையினர் அர்பாஸ்கானிடம் கேட்டனர். அப்போது, சூதாட்டத்தில் ஈடுபட்டு 2.70 கோடி ரூபாய் இழந்ததாக அர்பாஸ்கான் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல நடிகர் சல்மான் கானின் தம்பியான அர்பாஸ் கான், பல படங்களில் நடித்துள்ளார். படங்கள் தயாரித்துள்ள அவர், இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.