குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காணி பிணக்குகளுக்கு தீர்வு காண குடியியல் நீதிமன்ற நடவடிக்கைக்குச் செல்லவேண்டும். தனிப்பட்ட செல்வாக்குகளைப் பயன்படுத்தி காவல்துறையினர் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்ய கூடாது எதிர்காலத்தில் இவ்வாறு நடவடிக்கைகள் இடம்பெறக் கூடாது என யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் இன்று கட்டளை வழங்கினார்.
யாழ்.நாவலர் வீதியில் காணி ஒன்றுக்கான பாதை தொடர்பில் இரு தரப்பினர் இடையே எழுந்த பிணக்கில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் பாதையைத் திறந்துவிட்டுள்ளதாக நீதிமன்றுக்கு அறிக்கை சமர்பித்ததையடுத்தே நீதிவான் இந்தக் கட்டளையை வழங்கினார்.
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள காணி ஒன்றை குடும்பம் ஒன்று வாங்கியுள்ளனர். அந்தக் காணிக்கு மற்றொரு காணி ஊடாகச் செல்வதற்கு பாதை விடப்பட்டிருந்தது. அந்தப் பாதையை காணியின் உரிமையாளர் மூடியுள்ளார். இந்த நிலையில் காணியை வாங்கியவர்கள் அந்தப் பாதையை மூடிப் போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து தமது காணிக்குச் சென்றுள்ளனர்.
தம்மால் போட்டப்பட்ட பூட்டை உடைத்து தமது காணி ஊடாக அத்துமீறியதுடன் தனது காணிக்குளிலிருந்த பொருள்கள் திருடப்பட்டுள்ளன என, காணிக்கு பூட்டு போட்ட மருத்துவரான காணி உரிமையாளர் , காணி வாங்கிய குடும்பத்தின் தாயார், மகள் மற்றும் உறவினருக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
அதனடிப்படையில் காணிக்குள் அத்துமீறி சென்றமை மற்றும் திருட்டுக் குற்றச்சாட்டில் தாயும் மகள் மற்றும் உறவினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் கடந்த தவணை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு இருந்த போது, நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் விசாரணைக்கு வந்த போது, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, ஒளிப்படங்களை சமர்பித்து காணிக்கான பாதை தொடர்பில் மன்றில் உண்மை நிலையை விளக்கியிருந்தார்.
சம்பவம் தொடர்பில் நேரில் ஆராய்ந்து இன்று மாலை 4 மணிக்கு முன்னர் மன்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறையினருக்கு நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.
அந்நிலையில் சம்பவம் இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், விசாரணைகளை மேற்கொண்டதுடன், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடைய காணிக்குச் செல்லும் பாதைக்கு போடப்பட்டிருந்த படலையை அகற்றி பாதையைத் திறந்துவிட்டனர். பாதை திறக்கப்பட்டமை தொடர்பில் மாலை நீதிமன்றுக்கு காவல்துறையினர் அறிக்கையிட்டனர்.
அதனை ஆராய்ந்த நீதிமன்று, சந்தேகநபர்கள் மீது திருட்டுக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதால் அது தொடர்பில் முழுமையான விசாரணையை மேற்கொண்டு வரும் ஜூலை 31ஆம் திகதி மன்றில் அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவிட்டது.