குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – யாழ்ப்பாணம்..
யாழ்.மாவட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி போதாமையுள்ளது. அந்நிலையில் அரச அதிகாரிகளை குறை கூறி , அவர்களுடன் முரண்படுவது ஏற்புடையதல்ல என வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலையே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,இந்த நாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்திற்கு அரசாங்கம் அதிகளவிலான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் அதனை அரசாங்கம் செய்யவில்லை. இருந்தும் ஏனைய தெற்கில் உள்ள மாவட்டங்களுக்கு ஒதுக்குகின்றமை போன்றாவது யாழ் மாட்டத்திற்கு நிதி ஒதுக்கியிருக்கிறதென்றால் அதுவும் இல்லை. ஆக மொத்தத்தில் யாழிற்கு குறைவான நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.
இங்கு தான் பல்வேறு தேவைகளும் மற்றும் பிரச்சனைகளும் காணப்படுகின்றன. ஆகவே அரசு நிதியை ஏன் ஒதுக்கவில்லை என்று அண்மையில் யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நான் கொண்டிருந்தேன். அதற்கு அவரிடம் பதில் இல்லை. சிரிக்கின்றார். நாங்கள் அடிப்படை அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய நிலையில் இருக்கின்ற போது பிரதமர் பொருளாதார அபிவிருத்தி பற்றி பேசுகிறார்.
இங்குள்ள எமது நிலைமையை கூறி தேவையைக் கோருகின்ற போது பிரதமரே பதில் கூறாமல் சிரிப்பாரானால் நாம் இதனை அமெரிக்க ஐனாதிபதி ரொனால்ட் ட்ரம்பிடமா அல்லது பிரிட்டிஸ் பிரதமரிடமா கோர முடியும். இதே போன்றே எமது பாராளுமன்ற உறுப்பினர்களும் கேட்க வேண்டியவற்றைக் கேட்பவரிடம் கேட்காது இங்கு வந்து, அது இது ஏன் என்ன என்று கேட்பதும் அதிகாரிகளைக் குறை கூறுவதும் அவர்களுடன் முரண்படபடுவதுமாக இருக்கின்றனர்.
ஆகவே மாவட்டத்திற்கு ஒதுக்க வேண்டியதை அரசாங்கம் ஒதுக்கித் தர வேண்டும். அதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனூடாகவே சிறந்ததொரு நிர்வாகத்தை கொண்டு சென்று மக்களது தேவைகள் பிரச்சனைகளத் தீர்த்து வைக்க முடியும் என தெரிவித்தார்.