இலங்கையின் நாடாளுமன்ற பிரதி சபாநாயகராக ஐக்கிய தேசிய கட்சியின் ஆனந்த குமாரசிறி பெரும்பான்மை வாக்குகளுடன் தெரிவுசெய்யப்பட்டு உள்ளார். பிரதி சபாநாயகர் பொறுப்பிலிருந்து திலங்க சுமதிபால விலகியதனை அடுத்து நிலவிய வெற்றிடத்தை நிரப்புவதற்கு இன்று (05.06.18) இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இரகசிய வாக்கெடுப்பில் ஆனந்த குமாரசிறிக்கு 93 வாக்குகளை பெற்ற அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பர்னாண்டோபுள்ளேக்கு 57 வாக்குகள் கிடைக்கப்பெற்றன.
பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் சுதர்ஷினி பர்னாண்டோபுள்ளேயும், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஆனந்த குமாரசிறியும் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். அதன்படி நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் ஐ.தே.க.வின் ஆனந்த குமாரசிறி பெரும்பான்மை வாக்குகளுடன் பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை ஏற்கனவே யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் உள்ளிட்ட பலரின் பெயர்கள் பிரதி சபாநாயகர் தெரிவில் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.