குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தனக்கு அறிவிக்காமலேயே தன்னை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆலோசகராக நியமித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கேட்ட போதே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை தான் நேசிப்பதாகவும் அந்த கட்சி ஐக்கிய தேசியக்கட்சியுடன் இருக்கும் வரை அதில் இணைய போவதில்லை எனவும் இரண்டு கட்சிகளின் கூட்டு அரசாங்கம் காரணமாகவே தான் அதில் இருந்து ஒதுங்கிக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சிறப்பான இடத்திற்கு வந்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைய வேண்டிய தேவையில்லை. தேவையான நேரத்தில் எடுக்கவும் தேவையில்லாத நேரத்தில் தூக்கி எறியவும் தான் உள்ளிட்ட குழுவினர் கறிவேப்பிலைகள் அல்ல என்பது நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.