வடக்கில் சிங்கள மக்களை மீளகுடியேற்றுவது தொடர்பாக ஆராய ஜனாதிபதி, அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவை நியமித்துள்ளார்…
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் றிசார்ட் பதியூதீன் ஆகியோர் இடையில் வடக்கில் மீள்குடியேற்றம் தொடர்பில் ஏற்பட்ட மோதல் காரணமாக நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் வாக்குவாதமும் அமளியும் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக்கொண்டனர்.
வடக்கில் மீள்குடியேற்றம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழுவில் தன்னையும் உள்ளடக்க வேண்டும் என ஹக்கீம் கோரியுள்ளார். இதற்கு அமைச்சர் பதியூதீன் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதுடன், ஹக்கீம் குழுவில் இணைக்கப்பட்டால், தான் அதில் இருந்து விலகி போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சர் ஹக்கீம் கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதால், அவரை வடக்கின் மீள்குடியேற்றக்குழுவில் சேர்க்க முடியாது என றிசார்ட் பதியூதீன் குறிப்பிட்டுள்ளார். அப்படியானால், துமிந்த திஸாநாயக்க, பைசர் முஸ்தபா ஆகிய அமைச்சர்கள் எப்படி மீள்குடியேற்றக்குழுவில் சேர்தீர்கள் என ஹக்கீம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் றிசார்ட், வடக்கில் சிங்கள மக்களை மீளகுடியேற்றுவது தொடர்பாக ஆராய, ஜனாதிபதி, அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவை நியமித்துள்ளதாகவும் அமைச்சர் பைசர் முஸ்தபா, மாகாண சபை இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.