குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் வாக்குமூலம் ஒன்றை பெறவுள்ளது. அடுத்த சில தினங்களில் இந்த வாக்குமூலம் பெறப்பட உள்ளதாக காவற்துறை தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன.
கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து வாக்குமூலம் ஒன்றை பெற தினம் ஒன்றை ஒதுக்கி தருமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் முன்னாள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது. கீத் நொயார் கடத்திச் சென்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் இதற்கு முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொண்டது.
இதன் போது வெளியாகிய சில முக்கிய தகவல்கள் சம்பந்தமாகவே முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பாக கரு ஜயசூரியவிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தில், கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து தனக்கே முதலில் தகவல் கிடைத்ததாகவும் இதனையடுத்து அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தொடர்புக்கொண்டு, அவரது உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.