சென்னை விமான நிலையத்தில் ஓகஸ்ட் 15-ம் திகதிக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என விமான நிலைய இயக்குனர் சந்திரமவுலி தெரிவித்துள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகத்தின் சார்பில் ‘உலக சுற்றுச்சூழல் தின விழா’ கொண்டாடப்பட்ட நிலையில் அங்கு இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது உள்பட பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பல்வேறு தீமைகள் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. மேலும் 21 தினங்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல் பற்றி உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு நேர்காணல் வழங்கிய விமான நிலைய இயக்குனர் சந்திரமவுலி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டது. நம்முடைய வாழ்க்கையில் பிளாஸ்டிக்கை எப்படி தவிர்ப்பது என ஆராயப்பட்டது. 21 தினங்கள் ஒரு பழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்தால் அது நிரந்தர பழக்கமாக மாறிவிடும். எனவே 21 தினங்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது தொடர்பாக விழாவில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் பல்வேறு விமான நிறுவனங்கள் மற்றும் பல தரப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. பிளாஸ்டிக் ஒழிப்புக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தரவேண்டும். வருகிற ஓகஸ்ட் 15-ம் திகதிதிக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்த்து, சென்னை விமானநிலையத்தை பிளாஸ்டிக் இல்லா விமான நிலையமாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் எனத் தெரிவித்தார்