குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முதலாவது பொறியியல் பீட மாணவர்கள் நாளை வெள்ளிக்கிழமை (08-06-2018) பட்டம் பெற்று வெளியேறுகின்றனர். யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்துள்ள பொறியியல் பீடத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரம் சித்தியடைந்த மாணவர்கள் 2014 ஆம் ஆண்டு பல்கலைகழகத்திற்குள் உள்வாங்கப்பட்டு 2017 ஒக்ரோபர் முழுமையான கற்கைநெறியினை முடித்திருந்தனர். இவர்களுக்கான பட்டமளிப்பு நாளை வெள்ளிக்கிழமை யாழ் பல்கலைகழகத்தில் இடம்பெறுகிறது.
39 மாணவர்கள் உள்வாங்கப்பட்டு அதில் 31 கல்வியை பூர்த்தி செய்து நாளை பொறியியல் விஞ்ஞானமானி பட்டத்தை பெறுகின்றனர்.
1979 ஆம் ஆண்டு மறைந்த பேராசிரியர் அ.துரைராஜா அவர்கள் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் பொறியியல் பீடத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வந்தார். பின்னர் 1988 ஆம் ஆண்டு பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு யாழ் பல்கலைகழகத்தில் பொறியியல் பீடம் அமைப்பதற்கான அனுமதியை வழங்கியது. இருந்த போதும் நாட்டில் ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக அது நிறைவேறவில்லை.
இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு கொக்காவில் தொலைத் தொடர்பு கோபுரம் திறப்பு விழாவுக்கு வருகைதந்திருந்த அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் அப்போது அமை்சசராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவும், பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சந்திரகுமாரும் கிளிநொச்சி அறிவியல்நகர் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் பல்கலைகழகத்தை பரிந்துரைத்திருந்தனர்.
இவர்களுடன் அப்போது பல்கலைகழக துணைவேந்தராக இருந்த வச்தி அரசரட்ணம் மற்றும் பேராசிரியர் கந்தசாமி, தற்போதைய பீடாதிபதி அற்புதராஜா உள்ளிட்ட பலர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்
இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பயனாக அமைச்சரவை அனுமதியும் கிடைக்கப்பெற்று 2014 இல் மாணவர்கள் உள்வாங்கப்பட்டு கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படடு நாளை வெள்ளிக்கிழமை யாழ் பல்கலைகழகத்தின் முதலாவது பொறியியலாளர்களாக வெளியேறுகின்றனர்