இன்றைய நிகழ்வின் தலைவர் அவர்களே,இந் நிகழ்வை சிறப்பிப்பதற்காக வருகைதந்திருக்கின்ற சிறப்பு விருந்தினர்களே,கௌரவ விருந்தினர்களே,மன்னார் பிரதேசசபையின் தவிசாளர் அவர்களே,உறுப்பினர்களே, உத்தியோகத்தர்களே, ஊழியர்களே, மற்றும் சகோதர சகோதரிகளே, குழந்தைகளே!
2017ம் ஆண்டு PSDG நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 3.9 மில்லியன் ரூபா செலவில் அழகுபடுத்தப்பட்ட பேசாலை கடற்கரைப் பூங்கா இன்றைய தினம் வைபவ ரீதியாக மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படுகின்ற இந்த நிகழ்வில் நானும் கலந்து கொண்டு உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.
சுமார் 30 ஆண்டுகால தொடர்ச்சியான போரின் விளைவாக, எமது வடபகுதியின் வளங்கள் அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில், எமது மக்கள் எதுவித அபிவிருத்திகளும் இன்றி வாழவேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருந்தது. இந்த நிலை மாற்றப்பட்டு மக்கள் சுயமாக இயங்கக்கூடிய இன்றைய நிலையில் சுற்றுலாத்துறை தொடர்பான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை வடமாகாணசபை மேற்கொண்டுவருகின்றது.
சுற்றுலாத்துறைக்கான நியதிச் சட்டங்கள் அனைத்தும் தயாரிக்கப்பட்டு முறையாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 07.06.2018ல் சுற்றுலாத்துறை பணியகம் ஒன்றை அங்குரார்ப்பணம் செய்து வைத்திருக்கின்றோம். இப் பணியகத்தின் வழிகாட்டலின் கீழ் வடபகுதியில் காணப்படும் இயற்கைவளம் நிரம்பிய சுற்றுலாத்தளங்கள் மற்றும் கடற்கரை, பொழுதுபோக்கு மையங்கள் புனரமைப்புச் செய்யப்பட்டு சுற்றுலாத்துறை மேம்படுத்தப்படவிருக்கின்றது.
இன்று பேசாலை கடற்கரையில் திறந்து வைக்கப்படுகின்ற இந்த கடற்கரைப் பூங்கா இப் பகுதியில் வாழும் மக்களுக்கும்,இங்கு வருகை தரும்சுற்றுலாப் பயணிகளுக்கும் மாலை வேளைகளில் அமர்ந்திருந்து காற்று வாங்குவதற்கும், நடைப் பயற்சி, தேகப் பயிற்சி போன்ற பயிற்சிகளைச் செய்வதற்கும்ஏற்றவையாக இருக்கும்.
சில காலங்களுக்கு முன்னர் யாழப்பாணத்தில் வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் அமைந்துள்ள கடற்கரையில் மக்கள் கூடுதலாக மாலை நேரங்களில் கூடுவதும் அங்கு சமய, அறிவியல் தொடர்பான கூட்டங்கள் நடைபெறுவதும் வழக்கமாக இருந்தது. அப் பகுதியில் வாழ்ந்தஅக் காலத்திலேயே சற்றுப் பணம் படைத்தவர்களாகவும் வானொலிப் பெட்டியொன்றை சொந்தத்தில் வைத்திருக்கக்கூடியவர்களுமான ஒரு குடும்பத்தினர் தமது வானொலிப் பெட்டியில் இருந்து நீண்ட வயர்கள் மூலமாக கடற்கரையில் அமைக்கப்பட்ட ஒலிபெருக்கிச் சாதனங்களுக்கு பாடல்களையும் இன்னோரன்ன வானொலி நிகழ்வுகளையும் ஒலிபெருக்க நடவடிக்கை எடுத்திருந்தனர். அதனால் கடற்கரையில் கூடுகின்ற மக்கள் தமது இருக்கைகளில் இருந்தவாறே வானொலி மூலமாக செய்திகளையும்,பாடல்களையும் செவிமடுக்க வழி செய்திருந்தார்கள். இப்பேர்ப்பட்ட மக்கள் பொது நோக்கு சிந்தனையில் செயற்பட்டார்கள். அது போன்ற செயற்பாடுகளை இன்றும்இவ்வாறான கடற்கரைப் பூங்காக்களில் நவீன முறைப்படி நடைமுறைப்படுத்த முடியும்.
ஒவ்வொரு சுற்றுலா மையமும்அந்தந்தப் பகுதிகளுக்கு வருவாயைத் தேடிக் கொடுப்பதுடன் பொருளாதார நிலையில் நலிந்த நிலையிலுள்ள அப் பகுதி மக்கள் தமது பொருளாதாரத்தை விருத்தி செய்யக்கூடிய வகையில் ஒழுங்குகளை மேற்கொள்ளமுடியும். உதாரணமாக பேசாலை கடற்கரைப் பூங்காவில் மக்கள் அதிகம் கூடுகின்ற போது இப் பகுதிகளில் சுண்டல்,கடலை வியாபாரம் மற்றும் சிற்றுண்டி வியாபாரங்கள், தேனீர் வியாபாரங்கள் போன்ற பல வர்த்தக நடவடிக்கைகளுக்கு நல்ல மவுசு ஏற்படும். அதே போன்று இவ்வாறான கடற்கரைகளில் உள்ள தனியார் நிலங்களில் அந்த நிலச் சொந்தக்காரர்கள் அழகான சிறிய குடில்களை சட்டப்படி அமைத்து அதனை சுற்றுலாப் பயணிகளின் பாவனைக்காக குறைந்த வாடகைக் கட்டணத்தில் கையளிக்கின்ற போது சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும்.
பேசாலையைப் பொறுத்தவரையில் வீதியின் இரு மருங்கும் கடற்கரைகள் காட்சியளிக்கின்றமையால் இங்கு மீன்பிடித் தொழில் பிரம்மாதமாக நடைபெறும் என நம்புகின்றேன். வாடைக் காற்று ஒரு புறமும் சோளகக் காற்று இன்னோர் புறமும் அடிக்க மீன்பிடித் தொழில் சிறப்பாக நடைபெறும். பேசாலையைப் பொறுத்த வரையில் வருடத்தின் 12 மாதங்களும் அவர்களுக்கு வாய்ப்பான மாதங்களேஎன நம்புகின்றேன். எனவே இங்கு கடல் உணவுகளுக்கு பஞ்சமில்லை. ஆதலால் இப் பகுதிக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் கடல் உணவுகளில் தயாரிக்கப்பட்ட சுத்தமும் சுகாதாரமும் நிறைந்த உள்ளூர் உணவு வகைகளை விரும்பிஅருந்த வழிவகைகளை உண்டுபண்ணலாம்.
பேசாலைக் கிராமம் கத்தோலிக்க மக்கள் நிரம்பிய ஒரு பகுதி.மீன்பிடித் தொழிலைப்பிரதான தொழிலாகக்கொண்டிருக்கும்மக்கள் வாழ்கின்ற இடம்.ஆனால்கணிசமான இங்குள்ள மக்கள் கல்வியில் சிறந்து விளங்கி மிகப் பெரிய அரச பதவிகளிலும் தனியார்துறை பதவிகளிலும் பணியாற்றுகின்றார்கள். சர்வதேசதூதரகங்களில் கூட பணியாற்றுவதை நான் அறிந்திருக்கின்றேன். பொதுவாகவே மென்மையான குணம் படைத்த இவர்கள் இறைபக்தியுடன் கூடிய வாழ்வின் மேம்பாட்டை பெரிதும் விரும்புபவர்கள் என அறியத்தந்துள்ளேன்.
சில காலங்களுக்கு முன்னர் இப் பகுதிக்கான போக்குவரத்து மிகச் சிரமமாக இருந்தது. பாதைகள் சீர் செய்யப்படாது குன்றும் குழியுமாக இருந்த காரணத்தினால் யாழ்ப்பாணத்தில் இருந்து பேசாலையை வந்தடைய ஆகக் குறைந்தது 05 மணித்தியாலங்களாவது தேவைப்பட்டது. ஆனால் இன்று வீதிகள் புனரமைப்புச் செய்யப்பட்டு காப்பெட் வீதிகளாக மாற்றப்பட்ட பின்னர் 1½ மணித்தியாலங்களில் யாழ்ப்பாணத்திலிருந்து பேசாலைக்கு வரக்கூடியதாக இருக்கின்றது.அதேபோன்று பேசாலை – கொழும்புப் பிரயாணமும் இலகுவாக்கப்பட்டிருக்கின்றது. இதனால் மீன்களைக் கொள்வனவு செய்ய வருகின்ற கூலர் ரக வாகனங்களும் ஏனைய வாகனங்களும் விரைவாக கடல் உணவுகளை எடுத்துக் கொண்டு கொழும்பு நோக்கிச் செல்ல முடியுமாக இருக்கின்றது.
வீதிகள் செப்பனிடப்பட்ட பின்னர் பிரயாணம் இலகுவாக்கப்பட்டது.ஆனால்வீதி விபத்துக்கள் இங்கு அதிகரித்துள்ளது என்று அறிகின்றேன். இது கவலைக்குரியது.சாரதிகள் வீதி ஒழுங்குகளை முறையாகக் கவனிக்காத காரணத்தினாலேயே இவ் விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே அன்பார்ந்த மக்களே! எமக்கு வழங்கப்படுகின்ற அனைத்து அனுகூலங்களும் உதவிகளும் ஆதரவுகளும் எம்மால் முறையாக பயன்படுத்தப்பட வேண்டும் அல்லது பராமரிக்கப்பட வேண்டும். முறையற்ற பாவனைகள் விபரீதங்களையே தேடித் தரும். இன்று பொது மக்களிடம் கையளிக்கப்படும் பேசாலைக் கடற்கரைப் பூங்கா கூட முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும்.
வடமாகாணசபையைப் பொறுத்த வரையில் எம்மிடம் நிதி வளங்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. ஆனால் பூர்த்தி செய்யப்படவேண்டிய வேலைகளோ மலையளவாகக் குவிந்திருக்கின்றன.ஆகவே கிராம அபிவிருத்தி தொடர்பான வேலைகளில் மக்களின் பங்களிப்புக்களை நாங்கள் நாடி நிற்கின்றோம். அவைபோதியளவு கிடைக்கப் பெறுகின்ற போது அபிவிருத்திப் பணிகள் சிறப்புற நடைபெறுவன. இன்றைய இந்த நல்ல நிகழ்வை ஏற்பாடு செய்த அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் ஊழியர்களுக்கும் எனது அன்பையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.சுற்றுலா மையங்கள் கூடுதலாகக் காணப்படுகின்ற இந்த மன்னார்ப் பிரதேசத்தில் இன்னும் பல அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ள போதும்உரிய நிதிமூலங்கள் கிடைக்காமையால் அவை தடைப்பட்டுள்ளன. இவ் வேலைகள் நிச்சயமாக அடுத்த அடுத்த ஆண்டுகளில் ஆரம்பிக்கப்படுவனஎனத் தெரிவித்து வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்.
நன்றி
வணக்கம்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்
வடக்கு மாகாண முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை நிதியின் (Pளுனுபு) கீழ் 2017ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதி மூலத்தில்
அழகுபடுத்தப்பட்ட பேசாலை கடற்கரைப் பூங்கா
பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு
09.06.2018 சனிக்;கிழமை முற்பகல்11.30 மணியளவில்
கடற்கரைப் பூங்கா, பேசாலை
பிரதம அதிதியுரை