வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சிங்கப்பூரை சென்றடைந்துள்ளார். இருவருக்குமிடையிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (12) காலை 9 மணிக்கு சிங்கப்பூரின் சென்தோசா தீவில் உள்ள கேபெல்லா விடுதியில் நடைபெறவுள்ளது.
டிரம்ப் உள்ளூர் நேரப்படி 8.30 மணியளவில் சிங்கப்பூரின் பய லேபார் விமான நிலையத்தினை சென்றடைந்த அவரை, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றுள்ளார். அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சிங்கப்பூர் காவல்துறையினர் வாகனங்கள் அணிவகுக்க தான் தங்கும் விடுதிக்கு டிரம்ப் சென்று சேர்ந்தார்.
இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் இன்று ஞாயிற்றுகிழமை காலையே சிங்கப்பூர் சென்றடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வடகொரியா மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளின் சந்திப்பு தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றிருந்த தென்கொரியா நாட்டை சேர்ந்த இரு பத்திரிகையாளர்களை சிங்கப்பூர் அரசு வெளியேற்றியுள்ளது.
உரிய அனுமதி இல்லாமல் சிங்கப்பூரில் உள்ள வடகொரியா நாட்டு தூதர் அலுவலகத்துக்குள் நுழைந்ததாக நேற்று அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.இதைதொடர்ந்து, சிங்கப்பூருக்குள் நுழைய அந்த பத்திரிகையாளர்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டு, அவர்கள் தென்கொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சிங்கப்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்