பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என மத்திய சட்ட அமைச்சு யோசனை தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் பாலியல் பலாத்கார வழக்குகள் அதிகரித்து வருவதனைத் தொடர்ந்து 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்தை மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றியது.
அதன்போது பாலியல் பலாத்காரங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்கவும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக மத்திய சட்ட அமைச்சு ஆலோசனை நடத்தி தயார் செய்துள்ள அறிக்கையில், பாலியல் வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க நாடு முழுவதும் விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மத்திய உள்துறை அமைச்சிடம் விரைவில் வழங்கப்பட உள்ளது.
அத்துடன் பலாத்கார வழக்குகளை விசாரிப்பதற்காக காவல்துறை நிலையங்கள், மருத்துவமனைகளுக்கு சிறப்பு கருவிகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.. மேலும் பாதிக்கப்படும் பெண்கள், சிறுமிகளுக்கு கவுன்சலிங் அளிக்க மாவட்டம் தோறும் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.