வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்
ஒவ்வொரு வீட்டிலும் ஆண் பெண்களுக்கு வழங்குகின்ற உரிமைகள்தான் சமூகத்தின் உரிமையாக பரிணமித்து நாளை எம் இனத்தின் விடுதலையாக தோற்றம் பெறும் என வடமகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அனுசரனையுடன், மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வட மாகாண பெண்கள் வலுவூட்டல் பயிற்சிப்பட்டறையும் கொள்கை வகுப்பாக்க செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் : இதை நான் சிறு வயதிலும், குடும்ப வாழ்விலும் சம உரிமையோடு வாழ்ந்த அனுபவ ரீதியாக இதைக் கூறுகிறேன். இதுவே பெண்களின் உரிமைகள் சார்ந்து பேசக்கூடிய எண்ணப்பாங்கை எனக்கு தோற்றிவித்திருந்தது. குடும்பங்களில் பெண்களுக்கு அதிகளவில் ஒழுக்கங்கள் போதிக்கும் பெற்றோர் ஆண்பிள்ளைகளுக்கும் அவற்றைப் போதிக்க வேண்டும். அவ்வாறு இல்லாததால் இன்று சமூக வன்முறைகள் அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாகும். பெண்களுக்கு ஒழுக்கத்தை போதிக்கும் சமூகம் ஆண்களுக்கும் ஒழுக்கத்தை போதித்தால் தான் நல்லதொரு சிறந்த சமூகக்கட்டமைப்பை உருவாக்க முடியும். அண்மைக்காலமாக எமது பிள்ளைகளின் பண்பாடு, கலாசாரங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை நாம் பார்க்கின்றோம். எனவே எமது கலாசாரங்களை போதிக்கும் வேலைத்திட்டங்களை கிராம மட்டங்களிலிருந்து அமுல்ப்படுத்த வேண்டும். அப்போது தான் மாற்றங்களை விரைவாக ஏற்படுத்த முடியும்.
வடக்கு மாகாணத்தில் போரிற்குப் பின் பெண்கள் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார ரீதியாக பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதுடன் இவற்றால் மிகவும் பாதிப்படைந்துள்ளார்கள். தற்போது பெண்கள் மற்றும் சிறுவர்கள் அதிகம் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர்.
கடந்த காலங்களில் மகளிர் விவகார கொள்கை உருவாக்கப்பட்டிருந்தாலும், தற்போது பல புதிய பிரச்சினைகள் உருவாகி கொண்டிருக்கின்றன. குறிப்பாக பெண்கள் நுண்கடன் திட்டம் மற்றும் கலாசார ரீதியான அடக்குமுறைகளுக்கும் உட்படுகிறார்கள். எனவே காலத்தின் தேவை கருதி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இன, மத ரீதியாக எல்லோரையும் ஒன்றினைத்து அவர்களது கருத்துக்களை உள்வாங்கி இக்கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும், இவர்களின் வாழ்வை மேம்படுத்தவதையும் நோக்காகக் கொண்டு இச் செயலமர்வை நடாத்துகிறோம். இவற்றை நாம் பேசுவதை விட அந்தந்த சமூகம் சார்ந்து, இனம் சார்ந்து அவர்களால் வெளிப்படுத்தும் கருத்தக்களை ஆய்வு செய்து இக் கொள்கை உருவாக்கப்பட்டால் தான் சிறந்த பயனளிக்கும் எனும் நோக்கில் இதற்காக 05மாவட்டங்களிலிருந்தும் சகல விடயங்களையும் பிரதிநிதுத்துவப்படுத்தும் வகையில் விகிதாசார அடிப்படையில் உங்களை இங்கு அழைத்திருக்கிறோம். கிராம மட்ட உத்தியோகத்தர்கள் பல பிரச்சினைகளை உள்வாங்கி, தீர்வுகளை உள்வாங்கியிருப்பார்கள் என்ற ரீதியில் அவர்களது அனுபவப்பகிர்வுகளையும் உள்வாங்குவதற்காக இங்கு அழைத்திருக்கிறோம். இவர்கள் எல்லோரது கருத்துக்களையும் உள்வாங்கி நீண்ட காலத்திட்டடம் ஒன்றை தயாரித்து நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளோம். இத் திட்டம் இவர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான மாகாண மட்டத் திட்டமிடலாக அமையும்.
இக் கொள்கை வகுப்பாக்க செயலமர்வுக்கு அனுசரனை வழங்குகின்ற தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் கிராம மட்ட கட்டமைப்பினுடைய பெண்கள் கட்டமைப்பு பல பார தூரமான பிரச்சினைகளை எதிர்கொள்வதன் காரணமாக இவ்வமைப்பின் தலைவர் ஹர்மன் குமார தொடர்பு கொண்டதன் அடிப்படையில் அவர்களது கருத்துக்களையும் உள்வாங்குவதற்காக இவ்விடத்தில் கூடியுள்ளோம். இது தென்னிலங்கையிலுள்ள அரசசார்பற்ற நிறுவனமாக இருந்தாலும் கூட கடந்த காலங்களில் நாம் ஐக்கிய நாடுகள் சபையில் நீதி வேண்டி நின்றபோது எமது பக்க கருத்தான சர்வதேச விசாரனைக்கும் மற்றும் அரசுக்கு இரண்டு வருட கால நீடிப்பை வழங்கக்கூடாது என வலியுறுத்தியது மட்டுமன்றி அது சார் அறிக்கைகளையும் வெளியிட்டிருந்தார்கள். அதுமட்டுமன்றி கடந்த காலங்களில் காணாமல் போனோர் போராட்டங்களில் பங்குபற்றியவர்கள். நீண்ட நாட்கள் எங்களோடு நீதிக்காக குரல் கொடுக்கின்ற அமைப்பு. இவர்கள் தென்னிலங்கை மற்றும் வடக்கில் ஒரே முகமுடையவர்களாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நீதிக்காக குரல் கொடுக்கின்ற எவ்வமைப்புடனும் நாம் சேர்ந்து பயனிக்கத் தயாராக உள்ளோம்.
மகளிர் விவகாரத்திற்கு நிதி மற்றும் ஆளனி பற்றாக்குறை இருந்த போதும் பொருத்தமான செயற்திட்டங்கள் ஊடாக வடக்கு மாகாணத்தின் மகளீரை வலுவூட்டுகின்ற செயற்திட்டங்களை முன்னெடுப்போம் என்றார்.
யாழ் பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந் நிகழ்வில் மகளிர் விவகார அமைச்சின் செயலாளாளர் திருமதி ரூபினி வரதலிங்கம், தேசிய மீனவ ஒத்துழைப்ப இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஹேர்மன் குமார, மகளிர் விவகார இராஐhங்க அமைச்சின் முன்னாள் செயலாளர் திருமதி இமெல்டா சுகுமார், பேராசிரியர் வி.ரி சிவநாதன், கலாநிதி.விஐயலக்சுமி இராசநாயகம், அமைச்சின் திணைக்களப் பணிப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், மாவட்ட மட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் தலைவிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், இத் துறை சார்ந்து நிபுணத்துவம் சார்ந்தவர்கள் எனப் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.