குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மீள்குடியேற்ற காலப்பகுதியான 2010 மற்றும் 2012 காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு 50 வீத மானியத்தி்ல் வழங்கப்பட்ட இரு சக்கர உழவு இயந்திரங்களுக்கான மிகுதி பணம் செலுத்தி முடிக்கப்படாத உழவு இயந்திரங்கள் அனைத்தினையும் பறிமுதல் செய்ய கமநல ஆணையாளர் மாவட்டங்களுக்கு பணித்துள்ளதாக மாவட்ட கமநல சேவைகள் நிலைய ஆணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் 2010 மற்றும் 2012 ஆகிய காலப்பகுதியில் கடந்த அரசின் பொருளாதார அமைச்சும் யப்பான் நிறுவனம் ஒன்றும் இணைந்து கிளிநொச்சியில் உள்ள எட்டு கமநல சேவைகள் நிலையத்தால் 127 விவசாயிகளுக்கு இரு சக்கர உழவு இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. ஐந்து இலட்சத்து 25 ரூபா பெறுமதியான இரு சக்கர உழவு இயந்திரத்தை பெற்றுக்கொண்ட விவசாயி ஒருவர் இரண்டு இலட்சத்து 50 ரூபாவினை தவணை அடிப்படையில் செலுத்த வேண்டும்.
ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்படி உழவு இயந்திரங்களை பெற்றுக்கொண்ட ஒரு சில விவசாயிகளை தவிர பெரும்பாலனவர்கள் தவணைப்பணத்தை செலுத்தி முடிக்கவில்லை. தொடர்ச்சியாக மாவட்டத்தில் கடந்த மூன்று வருடங்களாக நிலவில வருகின்ற வறட்சி, மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறுமை, உற்பத்தியாளர்களுக்கு உத்தரவாதம் இல்லாத நிலைமை போன்ற காரணங்களால் விவசாயிகளால் குறித்த பணத்தை செலுத்த முடியாது போய்விட்டது.
அத்தோடு பலரது இரு சக்கர உழவு இயந்திரம் பழுதடைந்த போது அவற்றை திருத்தி பயன்படுத்துவதற்கான உதிரி பாகங்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலை என்பனவற்றால் அவற்றை கொண்டு வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாது போய்விட்டது என்பதனாலேயே பணத்தை செலுத்த முடியவில்லை என மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் கடந்த வாரம் கிளிநொச்சி கமநல சேவைகள் நிலையத்தில் இடம்பெற்ற குறித்த விவசாயிகளுடனான கலந்துரையாடலில் மாவட்ட கமநல ஆணையாளர் ஆயகுலன் எதிர்வரும் நவம்பர் மாத்திற்குள் பணத்தினை செலுத்தி முடிக்க வேண்டும் என்றும் அதற்கிடையில் இம்மாத்திற்குள் 75 பணத்தினை செலுத்தியிருக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் காவல்துறையினரைக் கொண்டு உழவு இயந்திரங்களை பறிமுதல் செய்து ஏலத்தில் விடுமாறு கமநல ஆணையாளர் தங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி ஆணையாளர் தெரிவித்துள்ளார் எனக் குறிப்பிட்டார்.
மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் மிக மோசமான நிலைமையினை அமைச்சு, உயரதிகாரிகள் மட்டங்களுக்கு எடுத்துச் சென்று விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் தீர்மானங்களை கொண்டுவருவதற்கு அரசியல்வாதிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்