ஏமனில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மிக முக்கிய ஹூடேடா (Hodeidah) துறைமுகத்தில் சவூதி ஆதரவு பெற்ற அரச படைகள் தாக்குதலை ஆரம்பித்துள்ளன. கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிவாரணங்களை கொண்டு சேர்ப்பதற்கு இந்த துறைமுகம் மிக முக்கிய வாயிலாக இருப்பதால், இது தாக்கப்பட்டால் மனிதப் பேரழிவு ஏற்படும் என உதவி நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன.
எனினும் தற்போது தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் போரால் பாதிக்கப்பட்ட 80 லட்சம் பேர் பட்டினியால் துன்பப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை இரவு 12 மணிக்குள் ஹூடேடா துறைமுகத்தில் இருந்து பின்வாங்க வேண்டும் என வழங்கப்பட்டிருந்த காலக்கெடுவை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் புறக்கணித்துள்ள நிலையில் இந்தத் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.