தவறான மொழிபெயர்புகளுடன் வெளியாகிக் கொண்டு இருக்கும் சுவிற்சலாந்து வழக்கின் உண்மையான தீர்ப்பு – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
Jun 14, 2018 @ 21:07
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதியாளர்களாகக் குற்றஞ்சுமத்தப்பட்டவர்களுக்கு சுவிஸ் பெடரல் குற்றவியல் நீதிமன்றம் சிறைத்தண்டனையை வழங்கவில்லை. இந்தக் குற்றஞ்சுமத்தப்பட்ட 13 பேருக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை அல்லது வழக்கிலிருந்து விடுதலை என்பன தீர்ப்பாக வழங்கப்பட்டுள்ளது. குற்றவியல் அமைப்பில் பங்கெடுத்தமை மற்றும் அதற்கு ஆதரவளித்தமை என்ற குற்றச்சாட்டுக்கள் நிரூபனமாகவில்லை எனக் கூறிய நீதிமன்று அனைவரையும் சிறையிலிருந்து விடுதலை செய்தது. ஐந்து பிரதிவாதிகள் வழக்கிலிருந்து முழுமையாக விடுதலையாகினர். ஏனையோர் நிதிக்குற்றச்சாட்டுக்களுக்கு இன்னமும் முகங்கொடுக்கின்றனர்.
நிதித் திரட்டல் மற்றும் அதனை விநியோகித்தல் போன்ற செயற்பாடுகளை ஒருங்கிணைத்த உலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC) ஒரு குற்றவியல் அமைப்பு அல்ல என்று நீதிமன்று மேலும் தீர்ப்பளித்தது. விசாரணையில் பங்கு பெறுவதற்கான இழப்பீடு, 2009 ல் தொடங்கப்பட்ட விசாரணையின் விளைவு மற்றும் தார்மீக சேதங்கள் ஆகியவை பிரதிவாதிகளுக்கு வழங்கப்பட்டன.
ஜனவரியில் தொடங்கி மார்ச்சில் முடிக்கப்பட்ட 8 வார வழக்கு விசாரணையின் போது, அரச தரப்புச் சட்டவாளர் குற்றஞ்சுமத்தப்பட்டவர்களுக்கு ஆறரை ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குமாறு கோரினார். இந்த வழக்கு விசாரணைக்கு $3.85 மில்லியன் செலவாகியது.
இந்த 13 பிரதிவாதிகளில் 12 பேர் சுவிஸ் குடியுரிமை பெற்ற தமிழர்கள் மற்றையவர் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர். குற்றவியல் அமைப்பில் பங்கெடுத்தமை அல்லது அதற்கு உதவியமை, மோசடி, ஏமாற்றல், சட்ட விரோத பணப்பரிமாற்றம் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளே இவர்கள் மீது சுமத்தப்பட்டது.
பெருமளவில் ஆயுதப் போராட்டத்திற்கு சுவிசில் உள்ள தமிழ்ச் சமூகத்திடமிருந்து நிதி திரட்டுவதற்கு அதி நவீன அமைப்பு உலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் (WTCC) பயன்படுத்தப்பட்டது என்றும் சுவிசில் உள்ள தமிழ்ச் சமூகம் குறித்த விடயங்கள் முறையாகப் பதிவுசெய்யப்பட்டு அவர்கள் பணம் செலுத்தக் கூடிய இயலுமை மதிக்கப்பட்டதென்றும் பணம் கொடுக்க மறுத்த குடும்பங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன என்றும் ஜிலியட்டே நோட்டோ என்ற அரசதரப்பு சட்டவாளர் குற்றஞ்சாட்டும் போது குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.