குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதகிருஸ்ணன் இன்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது மாகாணத்தின் கல்வி தொடர்பாக பல விடயங்கள் ஆராயப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கல்வி இரா ஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் மற்றும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோர், இன்றைய சந்திப்பு சிநேகபூர்வமான சந்திப்பாக இடம்பெற்றிருக்கின்றது.
இதன் போது வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக வும் ஆசிரிய வள பற்றாக்குறை மற்றும் பௌதீக வளப்பற்றாக்குறை தொடர்பாகவும் பேசி அவற்றுக்கான தீர்வினை பெறும் வழிகள் தொடர்பாகவும் ஆராய்ந்திருக்கின்றோம்.
இதனடிப்படையில் வடமாகாணத்தின் கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு தேவையான வளங்களை நல்லாட்சி அரசாங்கத்திடமிருந்து எப்படி பெற்றுக் கொள்வது என்பதையும் நாங்கள் விளக்கமாக ஆராய்ந்திருக்கின்றோம்.
இதன்படிடையில் விசேட கூட்டம் ஒன்றை அடுத்த மாதம் 5ம் திகதி நடாத்தப்படவுள்ளது. அந்த கூட்டத்தில் மாகாணசபை சார்பிலும் அதிகாரிகள் கலந்து கொண்டு தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். என இருவரும் கூறியிருக்கின்றனர். மேலும் முதலமைச்சருடனான இந்த சந்திப்பின்போது மலையக மக்கள் முன்னணியின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.