குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
இந்து சமய விவகாரங்களுக்கான பிரதி அமைச்சராக காதர் மஸ்த்தான் நியமிக்கப்பட்டமை ஒரு நிர்வாக தவறு எனவும், அதனை அவர்கள் சரி செய்வார்கள் ஆகவே அதையொரு பெரிய விடயமாக எடுக்காதீர்கள் எனவும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இந்து சமய விவகாரங்களுக்கான பிரதி அமைச்சராக இஸ்லாமியரான காதர் மஸ்த்தான் நியமிக்கப்பட்டமை தொடர்பில் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
இந்து சமய விவகாரங்களுக்கான பிரதி அமைச்சராக ஒரு இஸ்லாமியர் நியமிக்கப்பட்டமை ஒரு நிர்வாக தவறு. இந்து சமய விவகாரங்களுடன் சேர்த்து மீள்குடியேற்றம், புனர்வாழ்வு என பல அமைச்சு துறைகள் இருக்கின்றன.
அவற்றை பார்த்தவர்கள் இதனை கவனிக்காமல் இருந்திருக்கலாம். ஆகவே அது ஒரு நிர்வாக தவறு அதனை ஒரு பெரிய விட யமாக எடுத்துக் கொண்டு எல்லாவற்றையும் பிசைந்து கொண்டிருக்கவேண்டிய அவசியமே இல்லை. அந்த அமைச்சு துறையை மாற்றி வேறு ஒருவருக்கு கொடுப்பதன் ஊடாக நடந்திருக்கும் நிர்வாக தவறை அவர்கள் சீர்செய்து கொள்வார்கள் என முதலமைச்சர் தெரிவித்தார்.