2020-ம் ஆண்டுக்குள் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிடும் அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் நிலத்தடி நீர்மட்டம், குடிநீர் தேவை மற்றும் மாநிலங்களின் நீர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து முதன் முதலாக நிதிஆயோக் அமைப்பு வெளிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நீர்வளத்துறை மற்றும் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்றல் அமைச்சகங்களுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட ‘ஒன்றிணைந்த நீர் மேலாண்மை குறியீடு’ என்ற அந்த அறிக்கையை நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி நேற்று வெளியிட்டிருந்தார்.இந்த அறிக்கையில் குடிநீர் தட்டுப்பாட்டால் இந்தியா சந்திக்கப்போகும் இன்னல்களை எடுத்துரைத்து உள்ளதுடன் முக்கியமாக 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் தண்ணீர் தேவை 2 மடங்கு அதிகரிக்கும் எனவும், இதனால் கோடிக்கணக்கான மக்கள் மிகுந்த துயரத்துக்கு உள்ளாவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் இந்தியாவின் தண்ணீர் தேவையில் 40 சதவீதத்தை பூர்த்தி செய்யும் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது எனவும் 2020-ம் ஆண்டுக்குள் சென்னை, டெல்லி, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட 21 நகரங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் தீர்ந்துவிடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த நிலை தொடர்ந்தால் 2050-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.