கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்ட இருவரினது விளக்கமறியல் வரும் ஜூலை 2ஆம் திகதிவரை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கொக்குவில் இந்துக் கல்லூரின் ஒழுக்கக் கட்டுப்பாட்டு பொறுப்பாசிரியரும் உயர்தர கணித பாட ஆசிரியருமான 41 வயதுடைய நாடராஜா பிரதீபன் கடந்த 6ஆம் திகதி பாடசாலைக்கு அண்மையாக வைத்து தாக்கப்பட்டார். இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற 6 பேர் கொண்ட குழு ஒன்றே அவர் மீது தாக்குதலை மேற்ககொண்டது என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணைகளின் பின்னர் அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரும் 18ஆம் திகதி இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். தாக்குதலுக்குள்ளான ஆசிரியரை மன்றில் முன்னிலையாகுமாறு கட்டளையிட்ட நீதிவான் சி.சதீஸ்தரன், வழக்கை பிற்பகல்வரை ஒத்திவைக்கப்பட்டது. வழக்கு மீளவும் பிற்பகல் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் மன்றில் முன்னிலையானார்.
“எதிரிக் கூண்டில் நிற்கும் முதலாவது சந்தேகநபர் என்னைத் தாக்கினார். இரண்டாவது சந்தேகநபரும் அவ்விடத்தில் நின்றார்” என்று ஆசிரியர் மன்றில் தெரிவித்தார். “தாக்குதலுக்குள்ளான ஆசிரியருக்கு சிறிய காயங்களே உள்ளன. சாதாரண நோவுக்கும் வைத்தியசாலையில் விஓபி போடுகின்றனர்” என்று எதிரிகள் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் மன்றுரைத்தார். இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதிவான் சி.சதீஸ்தரன், சந்தேகநபர்களை எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.