சுயேச்சை குழு பிரதேச சபை உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை மனு…
கிளிநொச்சி மாவட்டத்தை விசேட தேவைக்குட்பட்ட மாவ்ட்டமாக கருத்தி விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவிடம் கரைச்சி பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளின் சுயேச்சைக் குழு உறுப்பினர்கள் கோரிக்கை மனுவொன்றை கையளி்த்துள்ளனர்.
நேற்றையதினம்( 18) கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதியிடம் சுயேச்சைக்குழுவின் 19 உறுப்பினர்களும் கையொப்பம் இட்டு கையளிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளின் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சுயேச்சைக்குழுவின் பிரதேச சபை உறுப்பினர்களான நாம் தாங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவரும் விடயம் என்னவெனில், கிளிநொச்சி மாவட்டம் யுத்த பாதிப்புக்களை அதிகம் சுமந்த மாவட்டத்தில் ஒன்று. இங்கு மீள்குடியேற்றத்திற்கு பின்னர் அரசின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன. ஆனாலும் எமது மாவட்டத்தின் தேவையினை வருடாந்த வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடு மூலம் பூர்த்தி செய்துகொள்ள முடியாது.
எனவேதான் நாம் தங்களிடம் வேண்டிக்கொள்வது கிளிநொச்சி மாவட்டத்தினை விசேட தேவைக்கு உட்பட்ட மாவட்டமாக கருத்தி அதற்கு விசேட நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டு அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கவேண்டும் என்பதே. அந்த வகையில் பின்வரும் மிக அவசியமான கோரிக்கைகளை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
01. கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்கும் சொந்தமான ஆயிரக்கணக்கான கிலோ மீற்றர் உள்ளக வீதிகள் புனரமைக்கப்படாது காணப்படுகிறது. எமது பிரதேச சபைகளின் நிதி வளத்தை கொணடு அவற்றை அபிவிருத்தி செய்ய முடியாது எனவே அதனை விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைப்புச் செய்யவேண்டும்.
02. எமது பிரதேச சபைகள் சாதாரன உழவு இயந்திரங்களின் மூலமே கழிவகற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் மக்களுக்கான சிறந்த சேவையினை வழங்க முடியாதுள்ளது எனவே நவீன கழிவகற்றல் வாகனங்கள் பிரதேச சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதோடு கழிவு மீள் சுழற்சி வசதியினை மேற்கொள்ளவும் உதவ வேண்டும்.
03. கிளிநொச்சி நகரில் அமைக்கப்பட்டு வருகின்ற சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் கடந்த பல ஆண்டுகளாக அபிவிருத்திச் செய்யப்படாது காணப்படுகிறது எனவே அதனை விரைவாக அபிவிருத்திச் செய்ய வேண்டும்
04. கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச சபையின் கீழ் உள்ள பிரதேசங்களில் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் ஆயிரம் குடும்பங்களுக்கு உட்பட்டவர்களுக்கு இலவசமாக குடிநீர் விநியோக இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே அதனை ஏனைய மக்களும் இலவசமாக பெற்றுக்கொள்ள ஆவணம் செய்ய வேண்டும். பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் குடிநீர் தேவையினை பூர்த்திசெய்யவும் விசேட நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள வேண்டும்
05. கிளிநொச்சி மத்திய கல்லூரிக்குச் சொந்தமான காணி தற்போது படையினரின் பயன்பாட்டில் காணப்படுகிறது. எனவே அதனை விடுவித்து பாடசாலையிடம் கையளிக்க வேண்டும். அத்தோடு கரைச்சி பிரதேச சபைக்குச் சொந்தமான நூலக காணியும் முழுமையாக விடுவிக்கப்படல் வேண்டும்.