வடக்குத் தெற்கு விரிசலுக்கு தொடர்பாடல் குறைபாடே பிரதான காரணமாகும். இருபக்கச் செய்திகளும் திரிவுபடுத்தப்படுவதால் உண்மை நிலைகள் அவர்களைச் சென்றடைவதில்லை. எனவே இருபக்க மக்களிற்குமிடையிலான தொடர்பாடல் பாலமாக அமையும் ஊடகவியலாளர்களாகிய நீங்கள் தான் இங்குள்ள உண்மை நிலைகளை விளக்கி எழுதி யதார்த்தத்தை அவர்களிடம் கொண்டுசென்று சேர்க்க வேண்டும் என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தென்னிலங்கை ஊடகங்களின் இணையத்திடம் தெரிவித்தார்.
தென்னிலங்கை ஊடகங்களின் இணையத்தினர் நேற்று அமைச்சரின் அலுவலகத்தில் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடினர். இதன் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்து அவர்களிடம் தெரிவித்ததாவது:
நாம் இனவாதம் பேசுபவர்கள் இல்லை. எங்களுடைய பாதிப்பையே நாம் பேசுகின்றோம். பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக, மக்களுக்கான குரலாகவே எமது குரல்கள் அமைகின்றன. மக்களுடைய குரல்களும் அவ்வாறானவையே. நாம் எமது உரிமைகளுக்காகவே முரன்படுகிறோம். ஆனால் இவையெல்லாம் பூதாகாரப்படுத்தப்பட்டு எழுதப்பட்டு இனவாதிகளாக இங்குள்ளவர்கள் காட்டப்படுகின்றனர். அரசியல் வாதிகள் கூட தமது சுயநலம் கொண்டு சில விடயங்களை திரிவுபடுத்தி, இனவாதக் கருத்துக்களால் மக்களை பிரித்து வைத்திருக்கின்ற போக்கும் காணப்படுகின்றது. எமது பாதிப்பை, உண்மைத் தன்மைகளை ஊடகவியலாளர்களாகிய நீங்கள் தான் விளங்கி எழுத வேண்டும்.
நாம் சிங்கள மக்களுடன் குரோத மனப்பாங்கு கொண்டவர்கள் அல்ல. இங்குள்ளவர்கள் தமது இனம், மதம், மொழி, கலாசாரம் போன்றவற்றை பாதுகாத்து ஒற்றுமையுடன் வாழவே விரும்புகின்றோம். எமது காணிகளில் குடியேற, எமது கடலில் மீன் பிடிக்கும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும். மாறாக கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மக்களும் இராணுவத்தை முற்றாக வெறுக்கின்றனர். இன்று இராணுவ முகாம்களிற்கு பக்கத்தில் வாழும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். பல்வேறு அச்சுறுத்தல்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவற்றினை வெளியே சொல்லவும் முடியாது, தீர்வுமின்றி பெரும் துன்பங்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். குடிமனைகளிற்கிடையிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும். மீள் குடியேற்றம், காணி விடுவிப்பில் பாரபட்சம் காட்டாது இதய சுத்தியுடன் நடக்க வேண்டும்.
இறுதி யுத்தத்தின் போது அப்பாவிப் பிள்ளைகள் சித்திரவதை செய்யப்பட்டு, கொன்று புதைக்கப்பட்டனர். இவற்றிற்கெல்லாம் நியாயம் கூற வேண்டும் என்பதையே அழுத்திக் கூறுகிறோம். எல்லா இராணுவத்தினரையும் தண்டிக்க வேண்டுமென்று கோரவில்லை. குற்றமிழைத்த இராணுவத்தை இனங்கண்டு அதாவது கறை படிந்த இராணுவத்தினரே தண்டிக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையிடம் கோருகிறோம். இவை யெல்லாம் இனவாதம் இல்லை.
ஓவ்வொரு அரசியல் வாதிகளிற்கும் பின்னால் ஓர் ஊடகங்கள் இருப்பதனால்தான் பக்கச்சார்பற்ற, நடுநிலையான, உண்மையான செய்திகள் வெளிவருவதில் தடைகள் ஏற்படுகின்றன. செய்திகள் அகவயத்தன்மை கருதி திரிவுபடுத்தப்பட்டு எழுதப்படுகின்றன. இவற்றையெல்லாம் ஆராய்ந்து நடுநிலையாக தகவல்களை வெளியிட வேண்டும. அதற்கு தாங்கள் போன்றோர் முன்வந்து செயற்பட வேண்டும் என்றார்.