குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் காவல்துறையினரினால் பெறப்பட்ட வாக்கு மூலங்கள் சிங்கள மொழியில் பதியபட்டமையை மனித உரிமை ஆணைக்குழு அறிந்து , தமிழ் மொழியில் வாக்கு மூலம் பதியப்பட வேண்டும் என காவல்துறையினருக்கு அறிவுறுத்தி உள்ளது என மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
மல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பெறப்பட்ட வாக்கு மூலங்களை காவல்துறையினர் சிங்கள மொழியிலையே பதிவு செய்துள்ளனர். அதனால் வாக்கு மூலங்களை வழங்கியவர்களது , கூற்றுக்கும் பதியப்பட்டவைக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்பட்டன. அதனை அடுத்து வாக்கு மூலங்களை தமிழ் மொழியில் பதியுமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
அதேவேளை துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு நேரில் சென்று அவதானித்து உயிரிழந்தவரின் உறவினர்கள் மற்றும் சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் ஆகியோரிடம் தகவல்களை பெற்றுக்கொண்டு உள்ளோம்.
சம்பவத்தினை நேரில் கண்டவர்களின் வாக்கு மூலங்களை பதிவு செய்யுமாறும் அறிவுறுத்தி உள்ளோம். அத்துடன் சுன்னாகம் காவல் நிலையத்திற்கு சென்று துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை உத்தியோகஸ்தர் வெளி சென்றமை , உள் வந்தமை , துப்பாக்கி எடுத்து சென்றமை தொடர்பில் தகவல் புத்தகத்தில் பதியப்பட்டு உள்ளதா ? என்பது தொடர்பிலும் தகவல்களை பெற்று உள்ளோம்.
குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் நாம் எமது அவதானத்தை தொடர்ந்து செலுத்தி வருவோம் என தெரிவித்தார்.