சிறைத் தண்டனை பெற்றுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையாடி வருவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரும் பௌத்த தேரர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் சட்டத்தின் மூலம் வழங்கப்படுகின்ற தீர்ப்பு குறித்து எதுவும் கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போதும் தண்டனை பெற்றுள்ள 15 பௌத்த தேரர்களும் 3 இந்து மத தலைவர்களும் சிறையில் இருப்பதாக தெரிவித்த அவர் பாரிய குற்றங்கள் புரிந்து தண்டனை பெற்றுள்ள பௌத்த தேரர்களும் அதில் உள்ளடங்குகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் சிலர் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள சிறைத் தண்டனையை அரசியலாக்க முயற்சிப்பதாகவும், ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் ஏனைய பௌத்த தேரர்களும் அவ்வாறு கோரும் நிலை ஏற்படும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.