குழந்தைகளை பெற்றோர் பாதுகாவலர்களிடம் இருந்து பிரிக்கும் உத்தரவை டிரம்ப் மீளப்பெற்றார்…
அமெரிக்காவில் நுழையும் அகதிகளின் குழந்தைகளை பிரித்து தனியே சிறையில் அடைக்கும் உத்தரவுக்கு தடை விதித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் டிரம்ப் அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.
இந்தப் புதிய உத்தரவு அமுலுக்கு வந்ததிலிருந்து எல்லை வழியாக அத்துமீறி அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 1940 பேர் எல்லை காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுடன் சென்ற 1995 சிறுவர், சிறுமியர் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு கூண்டுகள் போன்ற காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
டொனால்ட் டிரம்ப்பின் இந்த நடவடிக்கை மனிதநேயமற்ற செயல் என உலகளாவிய அளவில் எதிர்ப்புக்குரல்கள் கிளம்பிய நிலையில், ; அகதிகளின் குழந்தைகளை பிரித்து தனியே சிறையில் அடைக்கும் உத்தரவுக்கு தடை விதித்து ; டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எல்லை வழியாக ஊடுருவும் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைப்பதற்கு ஜனாதிபதி டிரம்ப் முடிவு கட்டியுள்ளார் எனவும் இதுதொடர்பான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.