தழிழ் அரசியல் பரப்பில் அடுத்தடுத்து இடம்பெற்ற அண்மைய நிகழ்வுகளில் இராணுவ அதிகாரி ஒருவருக்கு வடக்கில் அதுவும் கிளிநொச்சியில் கண்ணீர் மல்க அளிக்கப்பட்ட உணர்வுபூர்வமான பிரியாவிடை சம்பவம் பல்வேறு பரிமாணங்களில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.
கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரியான இராணுவ கட்டளைத் தளபதி கேணல் ரத்னபிரியவுக்கே இந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்ற பிரியாவிடை அளிக்கப்பட்டிருக்கின்றது. இவர் கடந்த நான்கரை வருடங்களாக அந்தப் பதவியில் பணியாற்றி வந்துள்ளார்.
புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வளிப்பற்காக அவர்களில் பெரும் எண்ணிக்கையானோர், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றார்கள். சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் வேலை வாய்ப்பு பெற்றுள்ள இவர்கள், கேணல் ரத்னபிரியவின் பொறுப்பில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இராணுவத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற விவசாயப் பண்ணைகளில் பணியாற்றி வருகின்றார்கள். இவர்களுக்கு இராணுவத்தின் ஊடாகக் கைநிறைய சம்பளம் வழங்கப்படுகின்றது. அரச, தனியார் துறையிலும் பார்க்க ஒப்பீட்டளவில் இந்த சம்பளம் மிகவும் கவர்ச்சிகரமானது. கல்வித் தகைமைகளும், முன் அனுபவமும் உள்ளவர்களுக்கு துறைசார்ந்த நிறுவனங்களில் வழங்கப்படுகின்ற சம்பளத்திலும் பார்க்க, சிவில் பாதுகாப்புத் திணைக்களம் இவர்களுக்கு அதிக சம்பளத்தை வழங்குகின்றது.
புனர்வாழ்வுப் பயிற்சி பெற்று சமூகத்தில் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு சமூகத்தில் உடனடியாக வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை. அவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு சாதாரணமாக எவரும் ஆர்வத்துடன் முன்வருவதுமில்லை. சந்தேகக் கண்ணோடும், நம்பிக்கையற்ற விதத்திலுமே சமூகம் அவர்களை ஆரம்பத்தில் நோக்கியது. இந்த நிலைமையில் சிறிய அளவில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்ற போதிலும், ஒரு நிலைமாற்றத்திற்கு உள்ளாகி தமது சொந்த குடும்பங்களிடம் திரும்பியுள்ள முன்னாள் போராளிகளுக்கு உளவியல் ரீதியான பாதுகாப்பு உணர்வை அளித்து, தனிப்பட்ட கௌரவம் சார்ந்த மன நிலையைப் போஷிப்பதற்கு சமூகம் தவறியிருக்கின்றது.
இந்த நிலையில், இராணுவத்திடம் சரணடைந்ததன் பின்னர், பல்வேறு உளவியல் தாக்கங்களுக்கு ஆளாகி வெறும் கையுடனும், உளச் சோர்வுடனும், வெறுமையான ஓர் எதிர்காலத்தைக் கொண்டவர்களாகவுமே அவர்கள் புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர், சமூகத்தில் அடியெடுத்து வைத்திருந்தார்கள்.
இந்த நிலையில் அவர்களுக்கு சிவில் பாதுகாப்புத் திணைக்களம் அளித்துள்ள வேலைவாய்ப்பு அவர்களில் பலருக்கு ஒரு வரப்பிரசாதமாக, கிடைத்தற்கரிய வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. பல்வேறு காரணங்களினால் மனச் சோர்வுக்கு ஆளாகியிருந்த அவர்களை இந்த வேலைவாய்ப்பு சமூக வாழ்க்கையில் உயிர்த்தெழச் செய்திருந்தது. அத்தகைய ஒரு மனநிலையிலேயே ஒரு நன்றியறிதலாக சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரியாகிய கேணல் ரத்னபிரியவுக்கு வழங்கப்பட்ட உணர்வுபூர்வமான பிரியாவிடை அமைந்திருந்தது என அந்த நிகழ்வு குறித்து கருத்து வெளியிட்ட முன்னாள் போராளிகளுடனும், அவர்களுடைய குடும்பத்தினருடனும் நெருங்கிப் பழகிய உளவியல் செயற்பாட்டாளர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.
புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர், முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் சமூகத்தில் இணைந்து வாழ்வதற்குத் தகுதி பெற்றிருக்கின்றார்கள் என்ற அடிப்படையில் அரசாங்கத்தின் உத்தரவுக்கமைய இராணுவம் அவர்களை சமூகத்தில் இணைத்திருந்தது. ஆயினும், முன்னர் வியந்து நோக்கி உயர்ந்த கௌரவத்தை அளித்திருந்த முன்னாள் போராளிகளுக்கு, சமூக ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் உரிய அங்கீகாரமும், வரவேற்பும் சமூகத்தில் கிடைக்கவில்லை.
மனச்சோர்வுக்கு உள்ளாகியிருந்த அவர்களுக்கு சிவில் பாதுகாப்புத் திணைக்களம் அளித்த தொழிவாய்ப்புடன் கூடிய ஆதரவும், அவரணைப்புமே அவர்களை அந்தத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரியான கேணல் ரத்னபிரிய மீது பற்று கொண்டிருக்கவும், அவருடைய இடமாற்றத்தின் போது கண்ணீர் மல்கி உணர்வுபூர்வமாக நன்றியறிதலை வெளியிட்டு விடையளிக்கத் தூண்டியிருந்தது என்றும் அந்த உளவியலாளர் குறிப்பிடுகின்றார். ஆயினும் இந்த நிகழ்வு, தமிழ் அரசியல் பரப்பில் பல்வேறு நிலைகளில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு சமூக, அரசியல் ரீதியிலான பல பரிமாணங்களைக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
சமூக ரீதியிலான பார்வை
முன்னர் விடுதலைப்புலிகள் பலம் பெற்றிருந்த காலப்பகுதியில் சமூகத்தில் அவர்களுக்கு உயர்ந்த மரியாதையும் கௌரவமும், கவனிப்பும் கிடைத்திருந்தன. அது அவர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்து, போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து அரசியல் ரீதியான விடுதலையைப் பெற வேண்டும், உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்திற்கு உரமேற்றியிருந்தது.
ஆயுத ரீதியான போராட்டச் சூழலில், விடுதலைப்புலிகளி;ன அரசியல் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் சார்ந்த செயற்பாடுகளில் முழுமையான ஓர் அர்ப்பணிப்புச் சூழலில் அவர்கள் பல வருடங்களாகச் செயற்பட்டிருந்தார்கள். குடும்பம் என்ற கட்டமைப்புக்குள் உட்பட்டிருந்த போதிலும், சாதாரண சமூகச் சூழலில் இருந்தும் சாதாரண சமூகச் செயற்பாட்டு நீரோட்டத்தில் இருந்தும் அவர்கள் பிரிக்கப்பட்டிருந்தார்கள். மணவாழ்க்கையின் பின்னரான குடும்பம் என்ற கட்டமைப்புக்கு உட்பட்ட சமூக வாழ்க்கையின் பங்களிப்பு, போராளிகளாக இருந்த அனைவருக்கும் கிட்டியிருக்கவில்லை.
சாதாரண சமூக வாழ்க்கைக்கு அப்பால், உளப்பூர்வமான அர்ப்பணிப்பையும், முழுநேரச் செயற்பாட்டு வல்லமையையும் வளர்த்து, போராட வேண்டும். போராட்ட இலக்கை அடைய வேண்டும் என்ற ஒரே சிந்தனையில் அவர்கள் மூழ்கி இருந்தார்கள். எனினும், ஆயுதப் போராட்ட வாழ்வுக்கு முற்றுப்புள்ளி இடும் வகையில் யுத்தம் திடீரென முடிவுக்கு வந்தபோது ஏற்பட்ட நிலைமாற்றத்திற்கு, அவர்கள் தயாராக இருக்கவில்லை.
தங்களுடைய போராட்டம் முறியடிக்கப்படுமானால் அல்லது தோல்வியடையச் செய்யப்படுமானால், அடுத்ததாக என்ன செய்வது என்பது குறித்த தயார்ப்படுத்தல் அல்லது மாற்றுத்திட்டத்திற்கான சிந்தனை முன்னாள் போராளிகளிடம் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை. வெற்றியையே குறிக்கோளாகக் கொண்டிருந்த நிலையில், யுத்த முடிவின் போது கிடைத்த தோல்வி ஒரு பேரிடியாகவே அவர்களுடைய மனங்களில் இறங்கியிருந்தது. இதனால் யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, இராணுவத்திடம் சரணடைய நேர்ந்திருந்த அவர்கள், அந்தப் புதிய மாற்றத்திற்கு ஈடுகொடுக்க முடியாத ஒரு நிலைக்கு ஆளாக்கப்பட்டிருந்தார்கள்.
பரம எதிரிகளாகக் கருதியிருந்த இராணுவத்திடம் சரணடைந்து, உணவுக்கும் ஏனைய அடிப்படைத் தேவைகளுக்கும் அவர்களின் தயவில் தங்கியிருக்க வேண்டிய அந்த மாற்றம், இயல்பாகவே அவர்களைப் பாதித்திருந்தது. அது மட்டுமல்லாமல், சரணடைந்த பின்னர், அவர்களிடம் றடத்தப்பட்ட புலன் விசாரணைகள் உள்ளிட்ட இராணுவத்தின் செயற்பாடுகளும் அவர்களுடைய உளவியலைக் குலைத்திருந்தது.
உளவியல் ரீதியாக பேரதிர்வுக்கு உள்ளாகி இருந்த அவர்கள், இராணுவத்தின் பிடியில், அவமானம், கழிவிரக்கம், ஆற்றாமை போன்ற பல்வேறு உணர்வுகளுக்கு ஆளாகி இருந்தார்கள். அத்தகைய ஒரு நிலையிலேயே அவர்களுக்கு இராணுவத்தினரால் புனர்வாழ் பயிற்சி அளிக்கப்பட்டது. தியானம் உள்ளிட்ட உள அமைதிக்கான சில பயிற்சிகள் அவர்களுக்குக் கிடைத்த போதிலும், திடீரென ஏற்பட்ட அகப்புற மாற்றங்களுக்கு முகம் கொடுக்கத்தக்க வகையில் அந்தப் பயிற்சிகள் அவர்களை உளவியல் ரீதியாகத் தயார்ப்படுத்தி இருக்கவில்லை.
இராணுவ அரசியல் மயம்சார்ந்த அந்த புனர்வாழ்வுப் பயிற்சியில் தொழில் வாய்ப்புக்கான பயிற்சிகளும் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும், போராட்ட வாழ்க்கைச் சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருந்த சமூக வாழ்க்கைக்கு அவர்கள் உரிய முறையில் தயார்ப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்றே கூற வேண்டும்.
ஏற்கனவே யுத்தத்தினாலும், யுத்தத்தின் பின்னரான மீள்குடியேற்றத்தின்போது இராணுவச் சூழலில் இயல்பு வாழ்க்கையை கட்டியெழுப்ப முடியாத சூழலுக்குள் சமூகம் தள்ளப்பட்டிருந்தது. இந்த நிலையில், வேறு வடிவங்களில் பாதிப்புக்கு உள்ளாகியிருந்த முன்னாள் போராளிகள் சமூகத்தில் இணைக்கப்பட்டபோது, அவர்களை சமூகம் இயல்பாக ஏற்றுக்கொண்டு வரவேற்று உள்ளடக்கிக் கொள்வதற்குத் தயாராக இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இராணுவ மயமான செயற்பாடுகள்
குறிப்பாக மோசமான ஒரு நீண்ட யுத்தத்தினால் ஏற்பட்டிருந்த தொடர்ச்சியான இடப்பெயர்வுகள், இழப்புக்களினால் சமூகமும் உளவியல் ரீதியாகப் பாதிப்படைந்திருந்தது. எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புக்களுக்கு நம்பிக்கை அளிக்கத்தக்க வகையில், மீள்குடியேற்ற நடவடிக்கைகளும் புனர்வாழ்வுச் செயற்பாடுகளும், அரசாங்கத்தினால் வடிவமைக்கப்பட்டிருக்கவில்லை. யுத்தச் சூழலில் சிக்கி சீரழிந்திருந்த சமூகம் தனது முன்னைய நிலைமைக்கு மீள்வதற்கு ஏற்ற வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளவியல் ஆற்றுப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
ஒருசில தொண்டு நிறுவனங்கள், அந்த விடயத்தில் கவனம் செலுத்திச் செயற்பட்டிருந்த போதிலும், அரசு அதற்கு உரிய இடம் கொடுக்கவில்லை. மாறாக அந்த வாய்ப்பை முற்றாக இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளே இராணுவ மயம் சார்ந்த மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வுச் செயற் திட்டங்களின்போது முன்னெடுக்கப்பட்டிருந்தன.
முன்னாள் போராளிகள் மத்தியிலும்சரி, வேரோடு இடம்பெயர்ந்து பல்வேறு பாதிப்புகளுக்கு முகம் கொடுத்திருந்த இடம்பெயர்ந்த மக்கள் மத்தியிலும்சரி, யுத்தம் முடிவுக்குக் கொண்டு பரப்பட்டதையடுத்து, ஆரோக்கியமான அரசியல் சமூகம் சார்ந்த புதிய வாழ்க்கையை நோக்கிய உளவியலை அரசாங்கம் உருவாக்க முயற்சிக்கவில்லை.
மாறாக, முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட யுத்தச் சூழல், மீண்டும் தலையெடுப்பதற்கு இடமளிக்கக் கூடாது, விசேடமாக இராணுவ ரீதியாக முறியடிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் நோக்கமும், அவர்களுடைய செயற்பாடுகளும் முழுமையாக இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்பதிலேயே அரசாங்கம் தீவிர கவனத்தைச் செலுத்தியிருந்தது. அதற்காக மீள்குடியேற்றப் பிரதேசங்களும் முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வுப் பயிற்சிச் சூழலும், முழுமையாக இராணுவ மயமாக்கப்பட்டிருந்தன.
அத்தகைய ஒரு சூழலிலேயே, மக்களுடைய மனங்களை வென்றெடுப்பதற்கான வேலைத்திட்டங்கள்; இராணுவத்தின் ஊடாக மீள்குடியேற்றப் பிரதேசங்களில அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த நடவடிக்கைகள் இரண்டு இலக்குகளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன என்பதே உளவியலாளர்களின் கருத்து.
யுத்தத்தின் பிடியில் இருந்தும், குறிப்பாக விடுதலைப்புலிகளின் நெருக்குவாரம் மிகுந்த ஆயுதமுனைச் சூழலில் இருந்தும் இராணுவுமே தமிழ் மக்களை மீட்டு எடுத்துள்ளது என்ற எண்ணத்தை வலுவாக்கி, அதற்காக இராணுவத்திற்கும் அரசாங்கத்திற்கும் மக்கள் விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பையே அரசாங்கம் கொண்டிருக்கின்றது. அதேNவைள. அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்து கொள்ள முயற்சிப்பவர்கள் அடக்கி ஒடுக்கப்படுவார்கள் என்ற எச்சரிக்கை உணர்வு தமிழ் மக்கள் மனங்களில் ஆழமாகப் பதிந்து, அந்த அச்சத்தின் மத்தியில் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்பதே அரசாங்கத்தின் அரசியல் ரீதியான திட்டமாகும்.
அந்தத் திட்டத்தின் ஓர் அம்சமாகவே சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் முன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தின் பொறுப்பில் கைநிறைந்த சம்பளமாக முப்பதினாயிரம் ரூபா கொடுப்பனவுடன் கூடிய தொழிவாய்ப்பை அரசாங்கம் வழங்கியிருக்கின்றது. இது, இராணுவத்தின் நிர்வாகத்தில் உள்ள பண்ணைகளிலான தொழில் வாய்ப்பு மட்டுமல்ல.
இளம் பெண்களுக்கான முன்பள்ளி ஆசிரியத் தொழில்வாய்ப்பும் கவர்ச்சிகரமான அதே சம்பளத்துடன் இராணுவத்தினரால் வழங்கப்பட்டுள்ளது. பண்ணைத் தொழில்வாய்ப்பைப் பெற்றுள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கான முன்பள்ளிகளில் இந்த ஆசிரியைகள் பணியாற்றுகின்றார்கள். முன்னாள் போராளி குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களுடன், அந்தக் குடும்பங்களின் அயலில் வசிக்கின்ற ஏனைய சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களும் இணைந்து இந்த முன்பள்ளி கல்வியைப் பெறுவதற்கான சந்தர்ப்பமும் இராணுவத்தினரால் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
இந்த வேலைவாய்ப்புத் திட்டமானது, அரசாங்கத்தின் எதிர்பார்ப்பை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கின்றது என்பதையே சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் பொறுப்பதிகாரியான கட்டளைத் தளபதி கேணல் ரத்னபிரியவின் இடம் மாற்றத்தின்போது முன்னாள் போராளிகளும், அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்களும் கண்ணீர் உகுத்து அளித்த உணர்வுபூர்வமான பிரியாவிடை நிகழ்வாகும்.
அரசியல் ரீதியான நோக்கு
நாடு அன்னியரிடமிருந்து சுதந்திரம் பெற்றதையடுத்து, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளும், அவர்களுடைய தாயகப் பிரதேசமாகிய வடக்கு கிழக்கு நிலப்பரப்பும் படிப்படியாக அடக்குமுறைக்கும், ஆக்கிரமிப்புக்கும், ஒடுக்கு முறைக்கும் உள்ளாக்கப்பட்டு வந்துன்ளது. இருப்பினும், மறுக்கப்பட்ட தமது அரசியல் உரிமைகளுக்காகவும், அடக்குமுறைகளுக்கு எதிராகவும் அந்த மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வந்துள்ளார்கள். இந்தப் போராட்டம் அந்த மக்களை ஓரணியில் ஒன்றிணைத்து வலிமை பெற்றிருந்தது. சாத்வீகப் போராட்ட காலத்திலும்சரி, ஆயுதப் போராட்டத்திலும்சரி அரசியல் ரீதியான இந்த ஒற்றுமை வலுவிழக்கவில்லை. ஆயினும், அந்த ஒற்றுமையைக் குலைப்பதற்கும், வடக்கு கிழக்கு இணைந்த ஓர் அலகாகிய தமிழர் தாயகப் பிரதேசத்தையும் பிய்த்துப் பிடுங்கி சிதறடிப்பதற்கான முயற்சிகள் பேரினவாத அரசியல்வாதிகளினாலும், அரசாங்கங்களினாலும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், விடுதலைப்புலிகளுக்கு அடுத்ததாக வலிமையும், ஆ,ளுமையும் மிக்கதோர் அரசியல் தலைமை இல்லாத சூழலில் இந்த முயற்சிகள் யுத்தத்தில் வெற்றி பெற்ற முன்னைய அரசாங்கத்தினால் இராணுவமயம் சார்ந்த அரசியல் உத்தியின் ஊடாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.
யுத்தகாலத்திலும், அதற்குப் பின்னரும்கூட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கீழ் ஒன்றாக அணிதிரண்டிருந்த தமிழ் மக்களை அரவணைத்து, உரியதோர் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிச் செயற்படத் தவறிய தமிழ்த் தலைமைகளின் போக்கு காரணமாகவே அரசியல் ரீதியாக தமிழ் மக்கள் பிளவடைய நேர்ந்திருக்கின்றது. அத்தகைய அரசியல் பிளவின் அபாயகரமான அறிகுறியாகவே இராணுவ அதிகாரி ஒருவருக்கு தமிழ் மக்களின் அரசியல் தலைநகராக யுத்த காலத்தில் திகழ்ந்த கிளிநொச்சியில் உணர்வுபூர்வமான பிரியாவிடை அளிக்கப்பட்டிருக்கின்றது.
உளப்பூர்வமான மக்கள் நலன்சார்ந்ததோர் அரசியல்வாதியின் சேவைக்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மனம் உருகியிருந்தால் அது வரவேற்கத்தக்கது.
ஆனால் யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நியாயம் கேட்டு போராடுகின்ற ஒரு சமூகத்தின் ஒரு பகுதியினர், யுத்த காலத்து உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூறுத் தயாராக இல்லாத நிலையில், அத்தகைய சம்பவங்கள் இடம்பெறவே இல்லை என மறுத்துரைக்கின்ற ஒரு பாதுகாப்பு கட்டமைப்பைச் சேர்ந்த தனி நபராகிய இராணுவ அதிகாரிக்கு, ஆளும் வர்க்கத்தினருக்கு சுயலாப அரசியல் ரீதியான அர்த்தத்தை விளைவிக்கத்தக்க வகையில் மனம் நெகிழ்ந்து கண்ணீர் சிந்தியிருப்பது கவலைக்குரியது. துரதிஸ்டவசமானது.