குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை சம்பந்தமாக நிறைவேற்றப்பட்ட யோசனையை நிறைவேற்ற இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பயோ நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப் இலங்கையின் சிரேஷ்ட அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
இலங்கை, அமெரிக்காவின் அனுசரணையின் கீழ் கடந்த 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இரண்டு யோசனைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைத்தது.
இந்த யோசனைகளில் உள்ள விடயங்களை நிறைவேற்ற? அமெரிக்கா, இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கும் என அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.
யோசனைகளை நிறைவேற்றுவதில் இலங்கை தொடர்ந்தும் முன்னேற்றத்தை அடைய இரு நாடுகளுக்கும் இடையிலான இருத்தரப்பு தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள நண்பர்கள், பங்காளிகளுடன் செயற்பட இலங்கைக்கு இருக்கும் முடியும் எனவும் அமெரிக்கா தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையுடன் ஏற்படுத்திக்கொண்ட அந்நியோன்ய உறவுகளை அப்படியே பேணி அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை இலங்கையின் முன்னேற்றத்திற்காக இலங்கையுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட உள்ளதாகவும் அமெரிக்கா தூதரகம் தெரிவித்துள்ளது.