வீரவங்ச எப்போதுமே மக்களுக்கு பெரிய பூச்சாண்டியை உருவகித்து காட்டுவார்….
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
வடக்கில் இருக்கும் சிவாஜிலிங்கம் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் செய்வதையே தெற்கில் இருக்கும் விமல் வீரவங்சவும் உதய கம்மன்பிலவும் செய்து வருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இனவாதத்தை தூண்டி தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுக்கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கம் விடுதலைப் புலிகளின் குடும்பங்களுக்கு பணத்தை கொடுப்பதாகவும் அது மக்களின் வரிப்பணம் என விமல் வீரவங்ச உட்பட கூட்டு எதிர்க்கட்சியின் மீண்டும் பெரிய பொய்யை கூறியுள்ளனர். வீரவங்ச எப்போதுமே மக்களுக்கு பெரிய பூச்சாண்டியை உருவகித்து காட்டுவார். அவர் எப்போதும் உண்மையை கூறுவதில்லை. மீண்டும் தென் பகுதி மக்களை பயமுறுத்தி நாட்டின் இனவாதத்தை தூண்டி ஆட்சியை கைப்பற்ற அவர் முயற்சித்து வருகிறார்.
அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்படவில்லை. அது கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றுநிருபம். அந்த சுற்று நிருபத்தை திருத்தி இழப்பீடு வழங்கும் முறையை மேலும் அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம். விமல் வீரவங்ச பொயக் கூறுவதில் திறமைசாலி. நாட்டுக்குள் மீண்டும் பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்பதே வீரவங்சவின் தேவை. மீண்டும் பிளவை ஏற்படுத்தி தென் பகுதி மக்களை ஏமாற்றும் தேவை விமல் வீரவங்சவுக்கு உள்ளது.விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக வேண்டும் என்பதே வீரவங்சவின் பிரார்த்தனை. வடக்கு, தெற்கு என்று பிளவை ஏற்படுத்தும் வீரவங்சவின் தேவையானது மிகவும் ஆச்சரியமானது. 2015 ஆம் ஆண்டு இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை சற்று குறைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். தவறுகளை திருத்தி முன்னோக்கி செல்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் முஜிபுர் ரஹ்மான்குறிப்பிட்டுள்ளார்