பசுமைப்புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தனது 92 வயதில் 84 வது கௌரவ கலாநிதிப் பட்டத்தை பெற்று சாதனைப் படைத்துள்ளார். வேளாண் துறையில் மிகப்பெரிய விஞ்ஞானியான, எம்.எஸ். சுவாமிநாதனுக்கு ஐ.டி.எம். பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பட்டத்தை வழங்கினார்.
பட்டமளிப்பு விழாவில் பேசிய சுவாமி நாதன், இந்தியாவில் பட்டினியினை போக்கும் ஒரே வழி நிலையான வேளாண்மையை ஏற்படுத்துவதாகும் என குறிப்பிட்டார்.இந்தியாவிலும் உலக அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராய்ச்சி நிர்வாகி, தலைவர் ஆகிய பதவிகளை வகித்த எம்.எஸ்.சுவாமிநாதன், மத்திய வேளாண்மைத் துறைச் செயலாளர், மத்திய திட்டக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்தவர்.
கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிகளுக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ‘வால்வோ’ விருது, ராமன் மகசேசே விருது உட்பட தேசிய மற்றும் சர்வதேச அளவில் 40-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர். உலகம் முழுவதும் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.
வேளாண் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெறவைத்த எம்.எஸ்.சுவாமிநாதன் 90 வயதிலும் தனது ஆராய்ச்சி அறக்கட்டளைப் பணிகளை சுறுசுறுப்புடன் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.