25 வருடங்களாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு யுத்தகுற்றத்தில் ஈடுபட்டுள்ளன என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கிறிஸ் சுமித் தெரிவித்துள்ளார். இந்தக் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் நம்பகத்தகுந்த சாட்சிகளுடன் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கிறிஸ் சுமித் தலைமையில், உலகளாவிய ஆரோக்கியம், உலகளாவிய மனித உரிமைகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் தொடர்பான வெளிவிவகார அமைச்சின் உப குழு ஆராய்ந்துள்ளது.
இந்த ஆராய்வின் ஆரம்ப உரையை ஆற்றிய கிறிஸ் சுமித், கருத்து வெளியிடுகையில், இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து சுமார் 10 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன, மேலும் 25 வருடகால யுத்தம் காரணமாக ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதுடன் பல்லாயிரக் கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். இருதரப்பும் பாரிய யுத்தக் குற்றச்செயல்களை புரிந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பலருக்கு நீதி என்பது கண்ணுக்கு தென்படாத ஒரு விடயமாகவே உள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் மனித உரிமைகள் குறித்து கவனம் செலுத்தும் நீதிக்கான வாய்ப்பை அதிகரிக்கும் என கருதிய போதிலும் இந்த அரசாங்கம் போதியளவு நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் கிறிஸ் சுமித் சுட்டிக்காட்டியுள்ளார்
நல்லிணக்கத்தை முன்னிலைப்படுத்தி தேர்தலில் போட்டியிட்ட போதிலும் சமூகங்களுக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது. மைத்திரிபால சிறிசேன ஒருசில விடயங்களை நிறைவேற்றிய போதிலும் இனக்குழுக்களுக்கு இடையிலான முரண்பாடுகள் அதிகரித்துள்ளன எனவும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கிறிஸ் சுமித் தெரிவித்துள்ளார்.