தம்மை கைது செய்யும்படி நீதிமன்றம் மறைமுகமாக உத்தரவிட்டிருப்பதால், நாட்டுக்கு திரும்பும் முடிவை கைவிட்டுள்ளதாக பாக்கிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவசரநிலையை பிரகடனம் செய்தமை , நீதிபதிகளை கைது செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முஷாரப் மீது சுமத்தப்பட்டுள்ளன. அத்துடன் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் அவர் மீது பல தேசத் துரோக வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை 2016-ம் ஆண்டு முதல் லண்டனில் தங்கியிருக்கும் முஷாரப், அடுத்த மாதம் நடைபெறவுள்ள பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிட அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரை நேரில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டது.
இதன்பேரில், பாகிஸ்தான் திரும்புவதாக அறிவித்த முஷாரப், தன்னை கைது செய்ய தடைவிதிக்க வேண்டும் என நிபந்தனை விதித்ததையடுத்து, அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்கும் வரையில், அவரைக் கைது செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவானது, தம்மை கைது செய்யுமாறு மறைமுக மாக தெரிவிப்பதால், பாகிஸ் தான் திரும்பும் முடிவை தான் கைவிட்டிருப்பதாக வீடியோ மூலமாக முஷாரப் அறிவித்துள்ளார்.