அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக கொள்கைக்கு எதிராக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த வரிகள் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வருகின்றன. 2.8 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நீல ஜீன்ஸ், மோட்டார் சைக்கிள்கள், போர்போன் விஸ்கி போன்ற பொருட்களுக்கு இவ்வாறு வரி விதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் இரும்புப் பொருட்கள் மீது 25 வீதமும் மற்றும் அலுமினியப் பொருட்கள் மீது வீதமும் வரிவிதிப்பதாக கடந்த மார்ச் மாதம் டிரம்ப் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வெளியானது முதல் தென்கொரியா, அர்ஜென்டினா, அவுஸ்திரேலியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் உலோகங்களின் அளவில் கட்டுப்பாடுகள் விதிக்க ஒப்புக்கொண்டன. இந்தநிலையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த வரிகள் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வருகின்றன.
அதேவேளை அமெரிக்காவின் முடிவினை கடுமையாக விமர்சித்திருந்த ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜோன் கிளவுட் ஜங்கர் ஐரோப்பிய ஒன்றியம் மீது அமெரிக்கா விதித்துள்ள விதிகள் அனைத்தும் தர்க்கம் மற்றும் வரலாற்றுக்கு எதிராக இருப்பதாகவும் தங்களின் பதில் நடவடிக்கை தெளிவாகவும் சரியாகவும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.