ஒன்பது ஆயிரம் குடும்பங்கள் தெருவுக்கு வருகின்றனர்..
முல்லைத்தீவு மாவட்டத்தின் நன்னீர், மீன்பிடிக்குரிய நந்திக்கடல் மற்றும் நாயாறு நீரேரிகள் முழுமையாக வன ஜீலராசிகள் திணைக்களத்திற்குச் சொந்தமாக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 21, 265 ஏக்கர் நிலப்பரப்பு வன ஜீவராசிகள் திணைக்களத்தால், இயற்கை ஒதுக்கிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரகடனப்படுத்தப்படும் பிரதேசத்துள் மனிதர்கள் பிரவேசிப்பது குற்றமாகும். இதனால் இரண்டு நீரேரிகளிலும் மீன்பிடியில் ஈடுபட்டு இருந்த 9 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமான நிலப்பரப்புகளை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பிற்கு அமைவாக, நந்திக்கடல், மற்றும் நாயாறு இயற்கை ஒதுக்கிடங்கள் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் நந்திக்கடல் இயற்கை ஒதுக்கிடத்திற்காக 10234 ஏக்கரும், நாயாறு இயற்கை ஒதுக்கிடத்திற்காக11031 ஏக்கரும் அரசாங்கத்தால் உள்வாங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நந்திக்கடலை நம்பிய 5000 குடும்பங்களும், நாயாறை நம்பிய 4000 குடும்பங்களும் தமது நன்னீர் மீன்பிடித் தொழிலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதோடு அவர்களின் வாழ்வாதாரமும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. முல்லைத் தீவின் நன்னீர் மீன்பிடியில் பிரதான இடத்தை வகிக்கும் நந்திக்கடல், மற்றும் நாயாறு நன்னீர் நிலைகள் வீச்சுத் தொழில், இறால் பிடிப்பு உள்ளிட்டவற்றிற்கு பிரதானமானவை என்பதுடன், நாயாற்றுக் கடல் நீரேரியை நம்பியே, குமுழமுனை, அளம்பில், ஆறுமுகத்தான்குளம், தங்கபுரம்,செம்மலை ஆகிய கிராமங்களைச் செர்ந்த மக்கள் தொழில் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.