Home இலங்கை அமெரிக்காவின் விலகல்: சாதகமா, பாதகமா?

அமெரிக்காவின் விலகல்: சாதகமா, பாதகமா?

by admin

பி.மாணிக்கவாசகம்

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இழைக்கப்பட்ட மோசமான மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பு கூறும் விடயத்தில் இந்த வாரம் சர்வதேச அளவில் ஒரு தளம்பல் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஐநா மனித உரிமைப் பேரவையில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்திருப்பதையடுத்தே சர்வதேச அளவிலான இந்த சோர்வு நிலைமை உருவாகியிருக்கின்றது.

இது அரசுக்கு சாதகமானது. இதனை அரச தரப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன உறுதிப்படுத்தியிருக்கின்றார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்களுக்கு இது பாதகமானது. ஆபத்தானதும்கூட.

பொறுப்பு கூறும் விடயத்தில், அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைப் பேரவையில் அடுத்தடுத்து பிரேரணைகளைக் கொண்டு வருவதில் அமெரிக்காவே முழுமையாகவும், முனைப்போடும் முன் நின்று செயற்பட்டிருந்தது. இந்த விடயத்தில் அவ்வாறு முக்கியமான பங்கேற்றிருந்த அமெரிக்கா ஐநா மனித உரிமைப் பேரவையின் உறுப்புரிமை நிலையில் இருந்து விலகுவதாக வெளிவந்துள்ள அறிவித்தல் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு மகிழ்ச்சியளித்திருக்கின்றது.

பொறுப்பு கூறும் விடயத்தில் ஐநா மனித உரிமைப் பேரவையின் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ள போதிலும், அவற்றை முன்னெடுப்பதற்குப் பதிலாக, அழுத்தங்களைப் பிரயோகிக்கின்ற சர்வதேச பங்காளர்களிடமே கால அவகாசத்தைப் பெறுவதிலேயே இலங்கை அரசு இதுவரையில் முன்னேற்றம் கண்டு வந்துள்ளது. யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னரான கடந்த ஒன்பது வருடங்களிலும், பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டில் இருந்து மேலும் விலகிச் செல்வதற்கு இந்த நிலைமை பேருதவி புரிந்திருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.

ஐநா மனித உரிமைப் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகுவதன் ஊடாக பொறுப்பு கூறும் விடயத்தில் இனிமேல் அழுத்தங்கள் குறைவடையும். அதனால் இலங்கைக்கு நன்மை கிடைக்கும் என்று திருப்தி கலந்த மகிழ்ச்சித் தொனியில் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமாகிய ராஜித சேனாரத்ன கருத்து வெளியிடடுள்ளார். இது பொறுப்புக்களைத் தட்டிக்கழிக்கின்ற அரசாங்கத்தின் போக்கை மேலும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது. அத்துடன், பொறுப்பு கூறுகின்ற கடமைகளில் இருந்து விலகிச் செல்லுகின்ற அரசாங்கத்தின் போக்கிற்கு, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை உரமளித்திருப்பதையே அமைச்சர் ராஜித சேனாரத்னவின் கூற்று வெளிப்படுத்தி இருக்கின்றது.

ஐநா மனித உரிமைப் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகுவதன் ஊடாக மட்டுமே பொறுப்பு கூறும் விடயத்தில் நிலைமை மோசமடைந்துள்ளது என்று கூறுவதற்கில்லை. மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கு பொறுப்பு கூற வேண்டும் என்று இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைப் பேரவையில் பிரேரணைகளை அடுத்தடுத்து கொண்டு வந்த அமெரிக்கா, இது வரையிலான காலப்பகுதியில், ஐநா மனித உரிமைப் பேரவையின் பிரேரணைகளை நிறைவேற்ற வேண்டும் என்று உரிய முறையில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்பது கவனத்திற் கொள்ள வேண்டிய விடயமாகும்.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட சூட்டோடு சூடாக, அங்கு நேரடியாக விஜயம் செய்த அப்போதைய ஐநா செயலாளர் நாயகம் பன் கீ மூன், பதவியில் இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கு பொறுப்பு கூற வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார். இருவருக்கும் இடையில் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின்போது இதுவிடயத்தில் எட்டப்பட்டிருந்த ஓர் இணக்கப்பாட்டின் இணை அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் பொறுப்பு கூறும் விடயம் ஐநா மனித உரிமைப் பேரவையில் முக்கிய இடம் பிடித்திருந்தது. அரசு பொறுப்பு கூற வேண்டும் என்ற சர்வதேச அழுத்தத்தை, அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளின் பேராதரவுடன் பிசு பிசுக்கச் செய்திருந்தார். ஆயினும் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30ஃ1 என்ற இலக்கம் கொண்ட பிரேரணையே இலங்கை அரசாங்கத்;தின் மீது கூடிய அழுத்தங்களைப் பிரயோகிப்பதாகவும், மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கு நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளின் ஊடாக பொறுப்பு கூற வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகவும் அமைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட 34ஃ1 ஆம் இலக்கப் பிரேரணை முன்னைய பிரேரணைக்கு வலுச் சேர்த்திருந்தது.

பக்கசார்பான சாக்கடை

அமெரிக்கா ஐநா மனித உரிமைமப் பேரவையில் கொண்டு வந்த பிரேரணைகள் பொறுப்பு கூறும் கடப்பாட்டில்; சர்வதேச அளவில் அரசாங்கத்தை இறுக்கமாகப் பிணைத்திருந்தது. இருப்பினும் அந்தப் பிணைப்பில் இருந்து விடுபடுவதற்காகப் பல்வேறு காரணங்களை அரசாங்கம் கற்பிப்பதிலும், அவற்றைக் கொண்டு தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்கும் தவறவில்லை.

பங்கரவாதிகளான விடுதலைப்புலிகளின் பிடியில் சிக்கியிருந்த தமிழ் மக்களை விடுவிப்பதற்காக மனிதாபிமான நடவடிக்கையாகவே இராணுவம் யுத்தத்தில் ஈடுபட்டிருந்தது என்று அரசாங்கம் தன்னிலை விளக்கமளித்து வந்தது. அத்துடன் அரசாங்கம் எந்த ஒரு கட்டத்திலும் மனித உரிமைளை மீறவில்லை. விடுதலைப்புலிகளே மனித உரிமைகளையும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களையும் மீறி பயங்கரவாதச் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார்கள் என்றும் அரசு பிரசாரம் செய்து வந்தது.

இந்த நிலையில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதிலும், யுத்தம் மூள்வதற்கு அடிப்படைப் பிரச்சினையாகிய இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதிலும் சர்வதேசம் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகின்றது என்றும், அந்த வகையில் முன்னிலைச் செயற்பாடுகளைக் கொண்ட அமெரிக்காவின் ஆதரவைத் தாங்கள் பற்றிப்பிடித்துச் செயற்பட்டு வருகின்றோம் என்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், கூட்டமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பானவரும், பேச்சாளருமாகிய சுமந்திரனும் உறுதியாக தமிழ் மக்களிடம் கூறி வந்தார்கள். இந்த வகையில் தாங்கள் இராஜதந்திர ரீதியான நகர்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைமையின் சார்பில் பிரசார நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. கூட்டமைப்புத் தலைமையின் இந்த இராஜதந்திரச் செயற்பாடுகள் தமிழரசுக் கட்சியின் சாதனை முயற்சியாகக் கூட அரசியல் ரீதியான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இன்னும் அந்தப் பிரசாரம் தொடர்கின்றது.

இத்தகைய ஒரு சூழலில்தான் அமெரிக்கா ஐநா மனித உரிமைப் பேரவையில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கின்றது. அவ்வாறு விலகுவதற்குரிய காரணங்களையும் அது வெளியிடத் தவறவில்லை.

மனித உரிமைளை மீறுகின்ற மோசடியாளர்களைப் பாதுகாத்துச் செயற்படுகின்ற அரசியல் ரீதியான பக்கசார்புள்ள ஒரு சாக்கடை என்று ஐநா மன்றத்தை ஐநாவுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹேலே அம்மையார் வர்ணித்துள்ளார்.

ஐநா மனித உரிமைப் பேரவையில் இருந்து விலகுவதென்பது, மனித உரிமைகளில் அமெரிக்கா கொண்டுள்ள பற்றுறுதியில் இருந்து பின்வாங்குகின்றது என்று அர்த்தமல்ல. ஆனால் அந்தப் பேரவை தனது பெயருக்கு பெறுமதி அற்றதாக உள்ளது என்று அமெரிக்காவின் விலகலுக்கான காரணத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமர்சனங்கள்

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாடுகளையும் ஐநா மனித உரிமைப் பேரவை உறுப்பினராகக் கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், சீனா, கியூபா, வெனிசுலா ஆகிய நாடுகளின் செயற்பாடுகளையும் அவர் எடுத்துக்காட்டியுள்ளார். ஆயினும் மனித உரிமைப் பேரவையில் தனிப்பட்ட தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்கும், இஸ்ரேலுடன் ஐநா கொண்டுள்ள வெறுப்புணர்வின் காரணமாகவுமே அமெரிக்க ஐநா மனித உரிமைப் பேரவையில் இருந்து விலகுகின்றது என்று சர்வதேச இராஜதந்திரிகள் சுட்டிக்காட்டி உள்ளார்கள்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்காவின் ஐநாவுக்கான தூதுவர் நிக்கி ஹேலே, இஸ்ரேல் மீது ஐநா பொருத்தமற்ற கவனக்குவிப்பையும், முடிவில்லாத பகைமை அணுகுமுறையையும் பின்பற்றி அரசியல் ரீதியாக பக்கசார்பற்ற வகையில் செயற்படுகின்றதே தவிர மனித உரிமைக்காக அது செயற்படவில்லை என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மனித உரிமைகளைப் பேணுவதில் ஏற்கனவே பலவீனமாக உள்ள ஐநா மன்றத்தை அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மேலும் பலவீனமாக்கச் செய்யவே உதவும் என்று மனித உரிமைக்கே முதலிடம் என்ற கருத்து கொண்ட எச்ஆர்எவ், சிறுவர் பாதுகாப்பு, கெயர் ஆகிய சர்வதேச மனித உரிமை மற்றும் உதவி அமைப்புக்கள் உட்பட 12 அமைப்புக்கள் அமெரிக்க ராஜசங்க செயலர் மைக் பொம்பேக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் சுட்டிக்காட்டியிருக்கின்ற.ன.

உலக நாடுகளில் மனித உரிமை மீறல்கள் பாதிக்கப்படுகின்ற நிலையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி புரிவதையும் அமெரிக்காவின் செயற்பாடு மேலும் கடினமாக்கும் என்று அந்த நிறுவனங்கள் தமது கடிதத்தில் எச்சரிக்கை செய்துள்ளன.

அதேவேளை இலங்கையின் மனித உரிமை மீறல் விடயத்தில் ஐநா தவறு இழைத்துவிட்டது, தனது கடமைகளைச் செய்வதில் இருந்து அது தவறி இருக்கின்றது என்று ஐநா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸ் நோர்வேயில் செய்தியாளர்களிடம் பேசுகையில் வெளியிட்டுள்ள ஒப்புதல் வாக்குமூலத்துக்கு ஒப்பான கருத்தானது, மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்டு கடந்த ஒன்பது வருடங்களாக நீதிக்காகவும் ஓர் அரசியல் தீர்வுக்காகவும் ஏங்கிக் கொண்டிருக்கின்ற, தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்பின் அவல நிலைமையைத் தெளிவாகக் காட்டியிருக்கின்றது.

பிரேரணைகளின் மூலம் இலங்கை அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வருவதற்கு முயன்றிருந்த அமெரிக்கா மனித உரிமைப் பேரவையில் இருந்து வெளியேறிய நிலையில், ஒன்பது வருடங்களாக வழங்கப்படாத நீதி வழங்கப்படுவதற்குரிய சூழலை ஏற்படுத்துவது என்பது இலகுவான காரியமல்ல.

ஆனால் மனித உரிமை மீறல்களில் நீதியை நிலைநாட்டி, அரசியல் தீர்வை எட்டுகின்ற முயற்சியில் அமெரிக்காவை முழுமையாக நம்பிய அணுகுமுறையைக் கடைப்பிடித்து வந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை அமெரிக்காவின் விலகல் தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்த வல்லது என்பதை ,ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற தரப்புக்களின் ஆதரவைப் பெறுவதற்காக அவற்றுடன் பேச்சுக்கள் நடத்துவோம் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அமெரிக்கா வெளியில் இருந்து செய்யக்கூடிய உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுக்களை நடத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். பொறுப்பு கூறும் விடயத்தில் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேசாப் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

எனினும், பொறுப்பு கூறுதலுக்கான செயற்பாடுகளை தனது இஸ்டத்திற்கு அமைவாக ஆமை வேகத்தில் ஆறுதலாக முன்னெடுத்து, ஐநா மனித உரிமைப் பேரவையையும், சர்வதேசத்தையும் அலட்சியப்படுத்திச் செற்படுகின்ற அரசாங்கத்தை பேரவையின் உறுப்பினர் என்ற வகையில் அதிகாரப் பலத்துடன் இருந்த போதே ஆக்கபூர்வமான அழுத்தங்களைக் கொடுக்காத அமெரிக்கா வெளியில் இருந்து எதனைச் சாதிக்கப் போகின்றது, விடாக்கண்டன், கொடாக்கண்டன் ரீதியில் செயற்படுகின்ற அரசாங்கத்திடம் எவ்வாறு சாதிக்கப் போகின்றது என்ற கேள்வி இயல்பாக எழுகின்றது.

தூரநோக்கும் தீர்க்கதரிசன சிந்தனையும் அவசியம்

சீனா தனது வர்த்தகச் செயற்பாடுகளை உலகமய அளவில் விரிவுபடுத்துவதற்காக இலங்கையை முக்கிய தளமாகக் கொண்டு காய்நகர்த்தலை மேற்கொண்டுள்ள சூழலில், இலங்கையின் பொறுப்பு கூறல் விடயத்தில் அமெரிக்கா தொடர்ந்தும் தனது பங்களிப்பை வழங்க வேண்டிய கட்டாய நிலையில் இருப்பதாகவே அவதானிகள் கருகின்றனர்.

வர்த்தக நோக்கத்தைக் காரணம்காட்டி இலங்கையில் கால் பதித்துள்ள சீனாவின் செயற்பாடானது, ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் இருப்புக்கு ஓர் அச்சுறுத்தலாகவே நோக்கப்படுகின்றது. இது அமெரிக்காவின் அரசியல் இராணுவ பொருளாதார நலன்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சவாலாகவும் கருதப்படுகின்றது. இத்தகைய ஓர் அரசியல் சூழலில் இலங்கை மீது கொண்டுள்ள தனது நிலைப்பாட்டை அல்லது பிடியை அமெரிக்கா கைவிடுவது என்பது அதன் எதிர்கால நலன்களுக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும் என்றும் அவர்கள் விளக்கமளிக்க முற்படுகின்றார்கள்.

ஆயினும், இஸ்ரேலுடான ஐநாவின் அணுகுமுறையை முதன்மைப்படுத்தி, ஐநா மனித உரிமைப் பேரவையில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ள அமெரிக்காவுக்கு இலங்கை விவகாரத்திலும் பார்க்க, இஸ்ரேல் விவகாரமே முதன்மையான விடயமாக அமைந்துள்ளது என்பது தெளிவாகி உள்ளது.

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன. சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் அலட்சியப்படுத்தப்பட்டிருக்கின்றன. போர்க்குற்றச் செயற்பாடுகள் இடம்பெற்றிருக்கின்றன. இதனால் அந்த நாட்டின் சிறுபான்மை தேசிய இனத்தவராகிய தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற மனிதாபிமான சிந்தனையிலும் பார்க்க, இஸ்ரேலில் அமெரிக்காவின் நலன்கள் அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன என்பதை ஐநா மனித உரிமைப் பேரவையிலிருந்து அது விலகியிருப்பது சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ் மக்களுக்கு இலங்கையில் இழைக்கப்பட்டுள்ள அநீதியே அமெரிக்காவுக்கு முக்கியமான விடயமாகவும், அரசியல் ரீதியில் விசேட கவனம் செலுத்த வேண்டிய விவகாரமாகவும் அமைந்துள்ளதாக தமிழ் மக்களும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையும் இதுகால வரையில் கருதி இருக்கலாம். அதன் காரணமாகவே, அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைப் பேரவையில் பிரேரணைகளைக் கொண்டு வந்ததாகக் கூட நம்பிக்கை கொண்டிருந்திருக்கலாம்.

அமெரிக்கா தொடர்பிலான அவர்களின் இந்தக் கருத்தும், நம்பிக்கையும், ஐநா மனித உரிமைப் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகியதன் மூலம் இப்போது பொய்த்துப் போயுள்ளது. இலங்கை என்பது சின்னஞ்சிறிய ஒரு தீவு. அந்தச் சிறிய தீவில் சிறுபான்மை இனமாக உள்ள தமிழர்களின் நலன்களிலும், அரசியல் உரிமைகளிலும், மனித உரிமைகளிலும் அமெரிக்கா அல்லது இந்தியா போன்ற நாடுகள் அக்கறை செலுத்துகின்றன என்றால், அதற்கு அந்த நாடுகளின் அரசியல் இராணுவ பொருளாதார நலன்கள் பின்னிப் பிணைந்திருக்க வேண்டும். அத்தகைய நலன்களின் அடிப்படையில் தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகவே அவர்கள் அந்த விடயங்களில் தலையீடு செய்வார்கள்.

சுய இலாபமின்றி எந்தவொரு நாடும் மற்றுமொரு நாட்டின் உள்விவகாரங்களிலோ அல்லது அந்த நாட்டில் உள்ள ஓர் இனக்குழுமத்தின் அரசியல் மற்றும் உரிமை நலன்கள் சார்ந்த விவகாரங்களிலோ தலையீடு செய்ய முன்வருவதில்லை. இந்த யதார்த்தத்தையும். உலக நாடுகளின் போக்கையும் அவற்றின் செல்நெறியையும் கவனத்திற் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அவ்வாறு அந்த விடயங்களைக் கவனத்திற்கொண்டு, அதற்கேற்ற வகையில் இராஜதந்திர ரீதியிலும், சமயோசிதமான காய் நகர்;த்தல்களின் மூலமாக மட்டுமே சிறுபான்மை இனம் ஒன்று தனது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். தனது நலன்களைப் பேணிக்கொள்ள முடியும்.

ஆழமான அரசியல் நலன்களுக்கான தூரநோக்கும், தீர்க்கதரிசன சிந்தனையும் அற்ற நிலையில் அவ்வப்போது எழுகின்ற அரசியல் சூழல்களில் நம்பிக்கை வைப்பதும், அதன் அடிப்படையில் எதிர்பார்ப்புக்களை முன்வைத்துச் செயற்படுவதும் ஏமாற்றத்திலேயே கொண்டு முடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அமெரிக்காவின் ஐநா மனித உரிமைப் பேரவையின் விலகல் இந்தப் படிப்பினையை உணர்த்துவதாகவே அமைந்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

1 comment

Logeswaran June 24, 2018 - 12:31 am

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் அடிப்படையில் குற்றவியல் விசாரணைக்கு தயார் செய்ய, உண்மையைத் தேட, பொறுப்புக் கூற, நீதி வழங்க, இழப்பீடுகளைக் கொடுக்க, கொடூர குற்றங்களை மீண்டும் செய்யாது தடுக்க, நல்லிணக்கத்தை உருவாக்க மற்றும் மனித உரிமைகளை அமுல்படுத்த தமிழ்க் கட்சிகள் தங்கள் பங்கை முழுமையாகச் செலுத்தவில்லை. உதாரணமாக:

1. தீர்மானத்தைப் பற்றி விழிப்புணர்வை பெரிய அளவில் ஏற்படுத்தி, தீர்மானத்தை அமுல்படுத்த இலங்கை அரசுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கவில்லை.

2. ஐ.நா. மனித உரிமைச் சபையின் தீர்மானங்களின் வலுவை அதிகரிக்க மற்றும் அரசாங்கத்தின் மேல் இருந்த அழுத்தத்தை பெருக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு போதுமான முயற்சிகளை எடுக்கவில்லை.

இன்று வரை தமிழ் மக்கள் அரிய வாய்ப்புகளை இழந்துள்ளார்கள். இனிமேல் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கக் கூடியவர்கள் தலைமை தாங்க வேண்டும்.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More