171
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பத்தமேனி மிட்டிலாங்கூடல் நடராஜா அம்பலவாணர் விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை(26) முற்பகல் சிறப்பாக இடம்பெற்றது. காலை மூலவரான விநாயகப் பெருமானுக்கு விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து காலை-08 மணிக்கு வசந்தமண்டபப் பூசைகள் ஆரம்பமானது.
வசந்தமண்டபப் பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து எம்பெருமான் அழகிய பீடத்தில் உள்வீதியில் மெல்லமெல்ல அசைந்தாடி அருட்காட்சி வழங்கினார். அதனைத் தொடர்ந்து முற்பகல்-09.30 மணியளவில் தேரில் விநாயகப் பெருமான் அலங்கார நாயகனாக ஆரோகணம் செய்தார்.
சிதறு தேங்காய் உடைக்கப்பட்டு விசேட தீபாரதனை இடம்பெற்றதைத் தொடர்ந்து முற்பகல்- 10 மணியளவில் அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க சித்திரத்தேர் திருப்பவனி ஆரம்பமாகியது.ஆண் அடியவர்களும், பெண் அடியவர்களும் ஒன்றிணைந்து சித்திரத் தேரின் வடம் தொட்டிழுத்தனர்.
சித்திரத் தேர் பவனி வரும் வேளையில் ஆண் அடியவர்கள் அங்கப் பிரதட்சணை செய்தும், பெண் அடியவர்கள் அடியளித்தும், கற்பூரச் சட்டிகளைக் கைகளில் ஏந்தியும் நேர்த்திக் கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர்.
முற்பகல்-11 மணியளவில் சித்திரத் தேர் மீண்டும் இருப்பிடத்தைச் சென்றடைந்ததைத் தொடர்ந்து அடியவர்கள் அர்ச்சனை செய்து வழிபாடாற்றினர்.
இதேவேளை, இவ்வாலய வருடாந்தத் தேர்த் திருவிழாவில் கிராம மக்கள், அயற்பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள், புலம்பெயர் தேசங்களிலிருந்து வருகை தந்த மக்கள் எனப் பல நுற்றுக்கணக்கான் அடியவர்கள் பக்திப் பெருக்குடன் கலந்து கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
படங்கள் – தீபன்
Spread the love