பிரான்ஸ் நாட்டு இளம்பெண் ஒருவர் கனடா எல்லையில் ஜொக்கிங் செய்து கொண்டிருந்தபோது தவறுதலாக எல்லை தாண்டி அமெரிக்காவிற்குள் நுழைந்து விட்டமையினால் எல்லைத் தாண்டி நுழையும் வெளிநாட்டவர்களை தடுத்து வைக்கப்படும் மையம் ஒன்றில் இரு வாரங்களாக சிறை வைக்கப்பட்டுள்ளார்.
தனது தாயை சந்திப்பதற்காக கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா சென்றிருந்த 19 வயது செடெலா ரோமன் என்பவர் கடந்த மே மாதம் 21ம் திகதி மாலை நேரத்தில் கனடா மற்றும் அமெரிக்காவை பிரிக்கும் எல்லைப் பகுதியில் உள்ள கடற்கரையில் ஜொக்கிங் செய்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு அமெரிக்க எல்லை பாதுகாப்பு படை காவல்துறையினர் அவரை வோஷிங்டனின் ப்ளென் பகுதியில் அனுமதியின்றி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்துள்ளார்கள்.
தான் அறியாமல் செய்த தவறு என அவர்களிடம் எடுத்துக் கூறிய போதும் அவர்கள் சட்டத்துக்கு புறம்பாக எல்லை கடந்து வந்திருப்பதாக தெரிவித்து கைது செய்ததாக செடெலா ரோமன் தெரிவித்துள்ளார்.
அங்கிருந்து செடெலாவை அழைத்துச் சென்ற அமெரிக்க காவல்துறை அதிகாரிகள், தெற்குப்பகுதியில் 220 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெளிநாட்டவர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் டகோமாவின் நோர்த்வெஸ்ட் சிறையில் அடைத்துள்ளார்கள்
செடெலாவிடம் தனது அடையாளத்தை நிரூபிப்பதற்கான அடையாள அட்டை எதுவும் இல்லாதநிலையில் தீவிரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தன்னை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றார்கள் எனவும் அங்கு அங்கு சுமார் 100 பேர் இருந்தார்கள் எனவும் தெரிவித்த அவர் தன்னை எப்போதும் அறையிலேயே அடைத்து வைத்திருப்பார்கள் எனவும் அங்கு முற்றத்தில் முள் கம்பிகள் போட்டப்பட்டு இருந்ததுடன் நாய்களும் இருந்தன எனத் தெரிவித்துள்ளார்.
ஆபிரிக்கா மற்றும் பல்வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள் எனவும் அங்கிருந்த அனைவரும் எல்லையை கடக்க முயற்சிக்கும்போது கைது செய்யப்பட்டவர்கள்தான் எனவும் தெரிவித்த செடெலா அவர்களை சந்தித்து பேசியது தனக்கு வாழ்க்கையில் ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தது எனவும் தெரிவித்துள்ளார்.
இறுதியில்அவருக்கு அவரது தாயாரை தொடர்பு கொள்ள அனுமதி வழங்கப்பட் நிலையில் பின்னர் அவரது தாயார் செடெலாவின் கடவுச்சீட்டு மற்றும் பணி அனுமதி போன்ற சட்டப்பூர்வ ஆவணங்களை எடுத்துக் கொண்டு தடுப்புகாவல் சிறைக்கு வந்தார்.
சட்டப்பூர்வ ஆவணங்கள் கிடைத்த பிறகும் அமெரிக்க அதிகாரிகள் அவரை விடுதலை செய்வதில் முட்டுக்கட்டைகள் இருந்த நிலையில் 15 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு செடெலா கனடாவுக்கு திரும்பினார்.