குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
சுழிபுரம் சிறுமி கொலை வழக்கில் நேரடி சாட்சியங்கள் இரண்டு உள்ளதாக வட்டுக்கோட்டை காவற்துறையினர் மல்லாகம் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். சுழிபுரம் காட்டுபுலம் பகுதியை சேர்ந்த சிவனேஸ்வரன் ரெஜினா (வயது 06) எனும் சிறுமி படுகொலை செய்யப்பட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வட்டுக்கோட்டை காவற்துறையினர் ஆறு பேரை கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட ஆறு பேரும் நேற்றைய தினம் புதன்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவானின் இல்லத்தில் முற்படுத்தப்பட்டனர்.
அதன் போது நீதிவான் முன்னிலையில் சமர்ப்பணம் செய்த காவற்துறையினர் ” படுகொலையை செய்தது முதலாவது சந்தேகநபர் எனவும் , அவருடன் இன்னுமொரு நபர் இக்கொலையில் உடந்தையாக இருந்துள்ளார். அவரை நாம் தேடி வருகின்றோம். முதலாவது சந்தேக நபர் தவிர்ந்த ஏனையவர்களில் இருவர் , முதலாவது சந்தேக நபரும் மற்றுமொரு நபரும் சிறுமியை அழைத்து சென்றமையை நேரடியாக கண்டார்கள் என சமர்ப்பணம் செய்தனர்.
அதனை தொடர்ந்து முதலாவது சந்தேக நபரை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிவான் ஏனைய ஐந்து பேரையும் பிணையில் செல்ல அனுமதித்தார்.