குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட உழவனூர் கிராமத்தின் பிரதான வீதி புனரமைப்பு தரமற்ற கிரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் கரைச்சி பிரதேச சபையின் மேற்பார்வையில் வீதி புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு முதற்கட்டமாக கிரவல் மண் பறிக்கப்பட்டிருந்தது. ஆனால் குறித்த கிரவல் தரமற்றது எனவும் அது கிரவல் அல்ல மக்கி மண் எனவும் பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட்டு வீதி புனரமை்பபு பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்து.
குறித்த மக்கி மண்ணைக்கொண்டு வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெற்றால் வீதியானது குறுகிய காலத்திற்குள் சேதமடைந்துவிடும். மிக மோசமான வீதியாக இருந்த உழவனூர் பிரதான வீதி முதற் தடவையாக பல மில்லியன்கள் ரூபா செலவில் புனரமைப்புச் செய்யும் போது அந்தப் புனரமைப்பு பணி தரமானதாக இருக்க வேண்டும் என்றும் பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதனை தொடர்பு கொண்டு வினவிய போது உழவனூர் வீதி புனரமைப்பு பணிக்கு பயன்படுத்துவதற்கு பறிக்கப்பட்ட கிரவலின் தரம் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக வீதி புனரமைப்பு பணிகள் இடை நிறுத்தப்பட்டு தற்போது கிரவல் மாதிரிகள் தர பகுப்பாய்வுக்கு அனுப்பட்டுள்ள நிலையில் அவை தரமான கிரவல் என சான்றிதழ் பெறப்பட்டு தற்போது கிளிநொச்சி பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளரிடம் தரச் சான்றிதழ் கையளிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது அவற்றைக்கொண்டு வீதியினை புனரமைக்க அனுமதி வழங்க்கப்பட்டு்ளளது என்றார்.
எனவே இது தொடர்பிலும் பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில் தர பகுப்பாய்வுக்கு அனுப்பட்ட கிரவல் மாதிரிகள் வீதியில் பறிக்கப்பட்டுள்ள கிரவல்களில் தரமான குவியலில் இருந்து எடுத்துச் சென்று அனுப்பியிருப்பார்கள். ஆனால் இங்கே பெருமளவுக்கு கிரவலுக்கு பதிலாக மக்கி மண்தான் காணப்படுகிறது எனவும் தெரிவித்தனர்.