குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் பொது வைத்தியசாலையில் லண்டனில் இருந்து வருகை தந்த இதய சத்திர சிகிச்சைக்கான விசேட வைத்தியர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தமது வைத்திய சேவையை ஆரம்பித்துள்ளனர். லண்டனிலிருந்து வைத்தியர் மயூரன் சண்முகநாதன் தலைமையிலான 3 பேர் கொண்ட வைத்தியர் குழு குறித்த பரிசோதனையை மன்னார் பொது வைத்தியசாலையில் மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் கடந்த 2017ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை நான்கு மாதங்களுக்கு ஒரு முறை குறித்த சேவையினை இலவசமாக மன்னார் மாவட்ட மக்களுக்கு வழங்கி வருகின்றனர். இதன்மூலம் இதுவரை சுமார் 250க்கும் மேற்பட்டவர்கள் நன்மை அடைந்துள்ளனர்.
இதேவேளை மன்னார் நலம்புரி சங்கத்தின் பிரித்தானியாவில் இயங்கும் நிறுவனத்தினால் மன்னார் வைத்தியசாலைக்கு தேவையான அதி முக்கியத்துவம் வாய்ந்த இதய சத்திரசிகிச்சை இதய நோயைக் கண்டுபிடிக்கும் கருவிகளும் மன்னார் பொது வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.
வைத்திய பரிசோதனையின் இறுதி நாளான இன்று வியாழன் (28) குறித்த குழுவினர் சிகிச்சைக்கான 2.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான எக்கோ பரிசோதனை இயந்திரம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி ஜூட் ரதனி, மன்னார் பொது வைத்தியசாலை பணிப்பாளர் நோய் பீரிஸ் மற்றும் வைத்திய சாலை பணியாளர்கள் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது