தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் நிரூபிக்கப்பட்ட 12 பேருக்கு ஈராக் அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. எனினும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் அடையாளங்களை வெளியிடவில்லை. கடந்த 2014-ம் ஆண்டு ஈராக்கின் மோசூல் நகரம் உட்பட அந்த நாட்டின் பெரும் பகுதியை ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனையடுத்து அமெரிக்க கூட்டுப் படைகளின் உதவியுடன் ஈராக் ராணுவம் போரில் ஈடுபட்டு அனைத்து பகுதிகளையும் படிப்படியாக மீட்டது.
இன்னும் சில இடங்களில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ஈராக் போரிட்டு வருகின்ற நிலையில் கைது செய்யப்பட்ட ஐஎஸ் அமைப்பினரை ஈராக் அரசு தூக்கிலிட்டு வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் 100 ஐஎஸ் தீவிரவாதிகளை ஈராக்; தூக்கிலிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெளிநாட்டவர்கள் உள்பட, தீவிரவாதக் குற்றச்சாட்டுக்கு ஆளான பல நூறு பேர் ஈராக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது