புங்குடுதீவில் வித்தியா, சுழிபுரத்தில் றெஜினா, போன்ற பெண் குழந்தைகளின் காட்டுமிராண்டித்தனமான கொலைகள் இனியும் நடைபெறாது தடுப்பதற்கு அரசியல் தலைமைகள், பொது அமைப்புகள், மதத் தலைவர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் ஒன்றிணையவேண்டும் என வடமாகாண ஆளுநர் அழைப்புவிடுத்துள்ளார்.
யாழ் வேம்படி மகளீர் கல்லூரியின் 180 ஆண்டு நிறைவுவிழாவும் பரிசளிப்பு விழா நிகழ்வும் நேற்று நடைபெற்றபோது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர்மேலும் உரையாற்றுகையில், வீண் உணர்ச்சி பேச்சுக்கள், கிளர்ச்சிகளினால் இவ்வாறான செயல்களை தடுத்து நிறுத்தி விடமுடியாது. இவை ஏன் நடைபெறுகின்றன என்பதன் பின்னணிகளை நன்கு விசாரித்து அறிந்து கொள்வது அவசியமானது.
“இந்த நிகழ்வில் நான் கலந்து கொண்டிருக்கின்றபோதும் முழு நாட்டினையும் சோகத்தில் ஆற்றிய சம்பவம் றெஜினாவின் படுகொலை என நான் நினைக்கின்றேன். பெரியவர்களின் சண்டையில் பழியை தீர்த்துக் கொள்வதற்காக ஒன்றும் அறியாத சின்னக்குழந்தை படுகொலை செய்யப்பட்டிருக்கின்றது. இது மிகவும் கொடூரமான சம்பவம். இதற்கு எதிராக நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் உயர்ந்த பாடசாலை ஒன்றின் பரிசளிப்பு விழாநிகழ்வில் கலந்து கொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது. பொறியியலாளர்களை, மருத்துவர்களை, விரிவுரையாளர்களை என பலதரப்பட்டவர்களை உயர் நிலை வகிப்பவர்களை உருவாக்கிய பாடசாலை வேம்படி மகளீர் கல்லூரி கொழும்பில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இப்பாடசாலைகளில் படித்த ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள். அது பாடசாலைக்கு பெருமை சேர்க்கின்றது.” என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ஸ்மாட் வகுப்பறையினை திறந்து வைத்ததுடன் மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கி கௌரவித்தார்.