தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என அக்கட்சியின் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாஸ தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ள பதினாறு பேர் அணியினர், இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயே உள்ளனர். அவர்கள் கட்சியின் மத்திய செயற்குழுவில் அங்கம் வகிக்கன்றனர். பாராளுமன்ற குழுக்கூட்டத்திலும் கலந்துகொள்கின்றனர். கட்சியின் மறுசீரமைப்பு பணிகளிலும் பங்கெடுக்கின்றனர். எனவே அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போவதில்லை.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிக்கொள்வதாக, 16 பேர் அணியில் உள்ளவர்கள், எழுத்துமூலம் அறிவிக்கவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வந்துள்ளதை வரலாறு நெடுகிலும் காணமுடிகிறது.
ஆயினும் கட்சியை எவராலும் பலமிழக்கச் செய்ய முடியாது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சாதாரண மக்கள் முதல் சகலரினதும் ஆதரவைப் பெற்ற கட்சியாகும். அந்த வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் பலமான நிலைக்கு உயர்த்தப்படும் என பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாஸ தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கமைவாக அபேட்சகர் களமிறக்கப்படும். அந்த அபேட்சகர் பொது வேட்பாளராக இருக்கமாட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கீகாரத்தைப் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அபேட்சகராக அவர் இருப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.